

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதியுள்ள நாவலுக்கு எதிரான போராட்டங்கள் எழுத்துரிமைக் கும், பேச்சுரிமைக்கும் எதிரானவை. இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கூறியுள்ளார்.
எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ நாவலில் மக்களின் மத உணர்வு களை புண்படுத்தும் வகையில் கருத்துகள் இருப்பதாகக் கூறி சில அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக எழுத்தாளர் பெருமாள் முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் நேற்று நிருபர்களைச் சந்தித்தனர். அப்போது ஆர்.நல்லகண்ணு கூறியதாவது:
பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ நாவல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நாவல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு கடந்த ஆண்டு வெளியானது.
இந்நிலையில், அவரது நாவ லுக்கு எதிராக கிளம்பியுள்ள கருத் துகள் எழுத்துரிமையையும், பேச்சு சுதந்திரத்தையும் நசுக்கும் வகையில் அமைந்துள்ளது. பெரு மாள் முருகன் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர். வரலாற்றுப் பழமைகளில் உள்ள தீமைகளை விமர் சிக்கும் போது, அவற்றை ஊக்கு விக்க வேண்டும். அதற்கு மாறாக, தாக்குதல் நடத்தக் கூடாது. தமிழக அரசு இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறும்போது, “தமிழகத்தில் ஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப் புகள் மதவாத சக்திகளை தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் தேடி வருகின்றன. இவ்விஷயத்தில் தமிழக அரசு வேடிக்கைப் பார்க் கக்கூடாது” என்றார்.
எழுத்தாளர் பெருமாள் முருகன் கூறியதாவது:
படைப்பாளிகள் மற்றும் ஊடகத் துறையினரின் சுதந்திரம் பாதிக்கக் கூடிய சம்பவங் கள் அதிகரித்துள்ளன. திருச்செங் கோட்டில் எதிர்ப்பாளர்கள் நடத்திய கடையடைப்பால் உள்ளூர் மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டேன்.
மேலும், ஊர் பெயரை மாற்று வதாக கூறினேன். அப்படி இருந்தும் எதிர்ப்பாளர்கள் என்னுடைய நாவலை எரித்தும், செருப்பால் அடித்தும் வன்முறையில் ஈடு பட்டனர்.
இந்த எதிர்ப்பு காரணமாக இரவோடு இரவாக நான் ஊரை விட்டு வெளியேறி விட்டேன். இந்த சம்பவத்தைக் கண்டித்து அனைத்துத் தரப்பினரும் கண்டன குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.