

எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு எதிராக வன்முறையைத் தூண்டியவர்கள் மீது உடனடியாக மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ‘தி இந்து’ இலக்கிய விழாவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னையில் ‘தி இந்து’ இலக்கிய விழா நேற்று முன்தினம் தொடங்கியது. 2-ம் நாளான நேற்று உணவு இடைவேளை முடிந்ததும், பரிசளிப்பு தொடங்கவிருந்த நேரத்தில் ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர் என்.ராம் திடீரென ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அவர் பேசியதாவது:
அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு அதிகாரப்பூர்வமாகவும் தார்மீக ரீதியிலும் இந்த இலக்கிய விழாவில் பரவலாக ஆதரவுக் குரல்கள் எழுந்திருப்பதை கண்கூடாகக் காணமுடிகிறது. அதனால், கருத்துரிமை நசுக்கப்படுவதற்கு எதிரான தீர்மானத்தை இந்த இலக்கிய விழாவில் நிறைவேற்ற திடீரென முடிவெடுத்துள்ளோம்.
இலக்கிய விழாக்களில் இதுபோன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது வழக்கில் இல்லை என்றாலும், அதை செய்யவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியிருக்கிறோம். இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற உதவ வேண்டும். தீர்மான விவரம்:
‘தி இந்து’ இலக்கிய விழாவில் சங்கமித்துள்ள பொறுப்புணர்வுமிக்க குடிமக்களான எழுத்தாளர்கள், வாசகர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் கலாச்சார ஆர்வலர்கள் ஆகிய நாங்கள், சிறந்த தமிழ் எழுத்தாளரான பெருமாள் முருகனை அடக்கியாள மேற்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சிக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம். அதேசமயத்தில் அவருக்கு எங்களது முழு ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் இந்துத்வா தீவிர ஆதரவாளர்கள், சாதிய அமைப்புகள் மற்றும் இதர சில சக்திகள் ஒன்றிணைந்து, 2010-ல் பெருமாள் முருகன் எழுதி வெளியானதும், 2013-ல் ஆங்கில மொழியாக்கம் (‘ஒன் பார்ட் உமன்’) செய்யப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியதுமான ‘மாதொருபாகன்’ நாவலுக்கு எதிரான விஷமப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளன.
பெருமாள் முருகனை பாதுகாக்காமல், அவருக்கெதிரான அச்சுறுத்தல் பிரச்சாரங்கள் மற்றும் வன்முறை அச்சுறுத்தல்களுக்கு துணைபோய், அவருக்கு சம்மன் அனுப்பி ஆஜராகச் செய்து மிரட்டி, மவுனியாக்கி ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் செய்த உள்ளூர் அரசு நிர்வாகத்தை கடுமையாக கண்டிக்கிறோம்.
‘வன்முறை, போராட்டம் போன்ற அச்சுறுத்தல்களை காரணம் காட்டி ஒருவரின் கருத்துரிமையைப் பறிக்க முடியாது. அவற்றைக் காரணம் காட்டி அரசு தனது கடமையை தட்டிக்கழிக்க முடியாது. எனவே, உரியவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் தார்மீகப் பொறுப்பு’ என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது. ஆனால், பெருமாள் முருகன் பிரச்சினையில் அந்தத் தீர்ப்பை உள்ளூர் அரசு நிர்வாகம் அப்பட்டமாக மீறியுள்ளது.
அச்சுறுத்தல்காரர்களின் ஆதிக்கத்துக்கு படைப்புத்திறன் பணிய நேர்ந்தால், பாதிக்கப்படுவது இலக்கியமும். சமுதாயமும்தான். அச்சுறுத்தல்களுக்கு பயப்படாமல் பெருமாள் முருகனின் நூலினை வெளியிட்ட, அந்தப் படைப்பாளிக்கு துணை நின்ற ‘காலச்சுவடு’ பதிப்பாளர்களை பாராட்டுகிறோம். பெருமாள் முருகனுக்கு ஆதரவாக யாருடைய தூண்டுதலும் இல்லாமல் தாமாகவே முன்வந்து போராட்டங்களை மேற்கொண்ட தமிழ் இலக்கியச் சமூகத்தின் செயல்பாடு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
பெருமாள்முருகனை மவுனியாக்கிய ஒப்பந்தம் சட்டரீதியாகவோ, தார்மீக ரீதியிலோ செல்லுபடியாகாத ஒன்று. எனவே, அவருக்கு அச்சுறுத்தல் விடுத்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, பெருமாள் முருகன் தனது சொந்த ஊரில் பயமின்றி வாழ்வதற்கு உகந்த சூழலை உருவாக்கவும், அவர் தனது இலக்கியப் பயணத்தைத் தொடர வழியேற்படுத்தவும் மாநில அரசை வலியுறுத்துகிறோம்.
பெருகிவரும் அச்சுறுத்தல்கள், சகிப்புத்தன்மையற்ற போக்கு மற்றும் தணிக்கை செய்யும் மனப்பாங்கு போன்றவற்றுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரும், அரசியலமைப்புச் சட்டத்தின்படி கருத்துரிமையை போற்றிப் பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு தீர்மானத்தை என்.ராம் வாசித்தார்.
தீர்மானத்தை முன்மொழிந்த போது, ‘தி இந்து’ முதன்மை ஆசிரியர் என்.ரவி, இயக்குநர் நிர்மலா லஷ்மன், உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி லீலா சேத், பிரபல பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய், வரலாற்று ஆசிரியர் ஏ.ஆர்.வெங்கடாசலபதி, எழுத்தாளர் சச்சிதானந்தன் ஆகியோர் மேடையில் இருந்தனர்.
இந்தத் தீர்மானம் உங்கள் (எழுத்தாளர்கள், வாசகர்கள்) முன்னிலையில் ஒருமனதாக நிறைவேறுகிறது என்று கூறிய என்.ராம், ‘மாதொருபாகன்’ நாவல் மற்றும் அதன் ஆங்கில மொழியாக்க நூல்கள் மற்றும் அதன் தொடர்ச்சியாக வெளியாகியுள்ள வெவ்வேறு முடிவுகளைக் கொண்ட இரு நாவல்களும் இங்கு விற்பனைக்கு வைத்துள்ளோம். அனைவரும் ஒரு புத்தகத்தை வாங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.