Published : 16 Jan 2015 11:11 am

Updated : 16 Jan 2015 11:11 am

 

Published : 16 Jan 2015 11:11 AM
Last Updated : 16 Jan 2015 11:11 AM

ஆடி அடங்காத இசை

குழந்தை மேதையாகப் பிறந்து இசை மேதையாக நம் நினைவில் இன்றும் நீங்காத இடம்பிடித்திருப்பவர் சீர்காழி கோவிந்தராஜன். இசை மேடைகளில் தமிழிசையை உயர்த்திப் பிடித்தது அவரின் வெண்கலக் குரல். சீர்காழியில் திரிபுரசுந்தரி ஆலயத்தில் நடக்கும் புகழ்பெற்ற ஞானப்பால் திருவிழாவின்போது தனது எட்டு வயதிலேயே பக்திப் பாடல்களைப் பாடியவர். அதன்பின் சென்னை, தமிழிசைக் கல்லூரியில் சேர்ந்தார். 1949-ல் கர்னாடக இசையில் தமிழிசைக் கல்லூரியின் `இசை மணி’ பட்டம் பெற்றார்.

கர்னாடக இசை

கோபாலகிருஷ்ண பாரதியாரின் பாடல்களை சிறந்த முறையில் பாடியதற்காக அன்றைக்கு கவர்னர் ஜெனரலாக இருந்த மூதறிஞர் ராஜாஜி பெயரால் வழங்கப்பட்ட விருதான தம்புராவை நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையவர்களிடம் இருந்து பெற்றார். சென்ட்ரல் மியூசிக் காலேஜில் சேர்ந்து சங்கீத வித்வான் பட்டம் பெற்றார். திருப்பாம்புரம் சுவாமிநாதப் பிள்ளை அவர்களின் வழிநடத்துதலின் மூலம் சீர்காழி கோவிந்தராஜின் இசை மேலும் மெருகேறியது. கர்னாடக இசை மேடைகளில் மதுரை சோமுவைப் போன்று மேடையில் பக்கவாத்தியத்துக்கு உரிய பங்களிப்பை வழங்கியவர் சீர்காழி கோவிந்தராஜன். இந்தியாவின் புகழ்பெற்ற மேடைகளிலும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் சீர்காழி கோவிந்தராஜன் பாடிப் பரவசப்படுத்தியிருக்கிறார்.

திரை இசை

ஏழிசை மன்னர் என்று புகழப்பட்ட சீர்காழி கோவிந்தராஜன், கல்கியின் `பொன்வயல்’ என்னும் திரைப்படத்தில் `சிரிப்புதான் வருகுதய்யா’ என்னும் பாடலைப்பாடி திரை உலகில் பின்னணிப் பாடகராகப் பிரவேசித்தார். இந்தப் பாடல் `லோகமே விசித்திரமய்யா’ என தெலுங்கிலும் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இந்தப் பாடலின் வெற்றி, திரை உலகத்தில் அவருக்கென தனி இடத்தை பெற்றுத் தந்தது. எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், பிரேம் நசீர், என்.டி.ராமாராவ், கல்யாண்குமார் தொடங்கி ரஜினிகாந்த் வரை பல முன்னணி நடிகர்களுக்கும் பின்னணி பாடியிருக்கிறார்.

ஜி.ராமநாதன், சுதர்சனம், கே.வி.மகாதேவன், டி.கே.ராமமூர்த்தி, எம்.எஸ்.விஸ்வநாதன், டி.ஆர்.பாப்பா, சங்கர்-கணேஷ், வி.குமார், இளையராஜா, தேவா என பல இசையமைப்பாளர்களின் இசையில் பக்தி, காதல், நகைச்சுவை போன்ற பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பாடல்களைப் பாடியிருக்கிறார். மெல்லிசைக்குரிய நளினம் அவரின் குரலில் இல்லை என்ற விமர்சனத்தையும் மீறி, `காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை…’ போன்ற பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. திரைப்படத்தில் அகத்தியர் வேடமேற்றும் வேறு சில கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார் சீர்காழி கோவிந்தராஜன்.

மணி ஓசை ஒலிக்கும் குரல்

1963-ம் ஆண்டில் பம்பாய் ஷண்முகானந்தா சபையில் எம்.எஸ்.விஸ்வநாதன் நடத்திய இசை நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியை இந்தியாவின் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களான நௌஷத்தும் லதாமங்கேஷ்கரும் முதல் வரிசையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த நிகழ்ச்சியில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய தேவன் கோயில் மணியோசை.. பாட்டைக் கேட்டதும், அந்தப் பாடலின் அர்த்தத்தை உடனே தெரிந்துகொண்டு, “அந்த தேவன் கோயில் மணி ஓசையின் துல்லியம் உங்களின் குரலிலும் வெளிப்பட்டது” என்றார்களாம் மெய்சிலிர்த்து!

கோல்டன் டிஸ்க் விருது

சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல்கள் அனைத்திந்திய வானொலி நிலையத்தாலும் பின்னாளில் தூர்தர்ஷன் மற்றும் கிராமஃபோன் நிறுவனத்தின் ரிகார்டுகளில் ஒலிப்பதிவு செய்யப்பட்டு விற்பனையில் பெரும் சாதனை படைத்தது. இதற்காக பக்தி இசையைப் பரப்பிய சிறந்த கலைஞருக்கான `கோல்டன் டிஸ்க்’ விருதைப் பெற்றவர். ஒலிப்பதிவுத் துறையில் இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்ப வசதிகள் இல்லாத அந்தக்காலத்திலேயே 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார்.

தமிழக அரசின் கலைமாமணி, மத்திய அரசின் பத்மஸ்ரீ , காஞ்சி பெரியவர் வழங்கிய கம்பீர கான மணி, தமிழிசைக் கல்லூரி வழங்கிய இசைப் பேரறிஞர் உட்பட பல விருதுகளைப் பெற்றவர். ஜன்னல்கள் இல்லாத வீடுகளில்கூட சீர்காழி கோவிந்தராஜன் பாடிய அபிராமி அந்தாதி ஒலிக்கும். `உலகம் வாழ்க’ என்னும் அவரின் வேண்டுதலை எதிரொலிக்கும்.

குழந்தை மேதைஇசை மேதைசீர்காழி கோவிந்தராஜன்வெண்கலக் குரல்இசைக் கலைஞர்

You May Like

More From This Category

More From this Author