Published : 30 Jan 2015 09:22 AM
Last Updated : 30 Jan 2015 09:22 AM

வேத கால பண்பாட்டைவிட சிந்துவெளி நாகரிகம் மிகப் பழமையானது: ஐராவதம் மகாதேவன் பேச்சு

சிந்துவெளி நாகரிகம் வேத கால பண்பாட்டைவிட மிகப் பழமையானது, அது திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது என்றார் கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன்.

தமிழ்ப் பல்கலைக்கழக கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை சார்பில் நேற்று நடைபெற்ற முனைவர் எ. சுப்பராயலு, முனைவர் செ.ராசு அறக்கட்டளைச் சொற்பொழிவில் அவர் பேசியதாவது:

சிந்துவெளி நாகரிகம் திராவிட சமுதாயத்தைச் சார்ந்தது. மொகஞ்சோதாரோவில் கிடைத்த முதுகைக் காட்டி உட்கார்ந்த நிலையில் உள்ள விலங்கு வடிவம், கொக்கி வடிவம், நாற்சந்தியைக் குறிக்கும் வடிவம், குவளை வடிவம் ஆகியவை கொண்ட முத்திரைகள் ஆய்வு செய்யப்பட்டன.

சிந்துவெளியில் காணப்படும் சிந்துவெளி எழுத்துக்களின் இறுதியில் காணப்படும் ‘அன்’, நகரத் தலைவன், பாண்டி, பாண்டியன் போன்றவற்றைக் குறிக்கின்றன. இதற்கு இணை யான வார்த்தைகள் பழந்தமிழிலும் உள்ளன. இந்த 4 எழுத்துகளையும் சேர்த்து வாசிக்கும்போது நகர வணிகன் என்ற வாக்கியம் கிடைக்கிறது. இதை, மாற செழிய வழுதி/பாண்டியன் எனவும் வாசிக்க முடியும்.

இதையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும்போது, சிந்துவெளி மக்கள் பேசியது திராவிட மொழி. அங்கு வாழ்ந்த மக்களே புலம்பெயர்ந்து தென்னகத்துக்கு வந்ததால், சிந்துவெளி மொழிக் கூறுகள் பழந்தமிழ் மொழியில் காணப்படுகின்றன என்பது என் கருத்து.

பாண்டியர்களின் மூதாதையர் கள் சிந்துவெளியில் வணிகத் தில் ஈடுபட்டிருக்கலாம். அவர்கள், தெற்கு நோக்கி நகர்ந்து, திராவிட மொழி பேசியிருக்கலாம். குறிப்பாக, பண்டைய தமிழ் பேசியவர்களாக இருந்திருக்கலாம்.

வெளியிலிருந்து வந்த ஆரியர்கள் சிந்துவெளியில் குடியேறிதன் காரணமாக அங்கு இந்திய- ஆரிய சமுதாயம் உருவாகியிருக்கலாம். இந்திய- ஆரிய பண்பாட்டில் இருந்த ரிக் வேதத்தில் உள்ள வார்த்தைகள் சிந்துவெளியில் இருந்து கடன் பெற்றவை. ரிக் வேதத்தில் வரும் பூசன் என்ற கடவுளின் பெயர் சிந்துவெளி மக்களிடம் இருந்து எடுக்கப்பட்டது.

சிந்துவெளி குறியீடுகளுக்கும் பண்டைய தமிழ் வார்த்தைகளுக்குமான தொடர்பு அதிகமாக இருப்பதை சங்க காலத் தமிழ்ச் சொற்கள் மூலமாக அறியலாம். இதன் மூலம், சிந்துவெளி நாகரிகம், வேத பண்பாட்டைவிட காலத்தால் மிகப் பழமையானது என்பதும் சிந்துவெளி நாகரிக மொழி, தொல் திராவிட வடிவம் கொண்டது என்பதும் எனது முடிவு என்றார் ஐராவதம் மகாதேவன்.

துணைவேந்தர் ம.திருமலை, புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் இந்தியவியல் துறைத் தலைவர் எ.சுப்பராயலு, பதிவாளர் சே.கணேஷ்ராம், சுவடிப்புலத் தலைவர் சு.ராசவேலு, பேராசிரியர் ந.அதியமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x