

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் இந்திய வருகை, தமிழக மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் அமைய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வலியுறுத்தினார்.
பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் 3 நாட்கள் நடைபெறவுள்ள புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவையொட்டி, நேற்று செய்தி யாளர்களிடம் அவர் பேசிய தாவது:
தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் வருகிற 16, 17, 18 ஆகிய 3 நாட்கள் தமிழ் புத்தாண்டு- பொங்கல் விழா பெரியார் திடலில் நடைபெற உள்ளது.
காந்தியின் நினைவு நாளான ஜன. 30-ம் தேதி, மதவாதத்துக்கு எதிரான மாநாடு கோவையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் காங்கிரஸ், கம்யூ னிஸ்ட்கள், திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ள வுள்ளனர்.
இலங்கையின் புதிய அதிபரான மைத்ரிபால சிறிசேனா, தமிழர்கள் மற்றும் சிங்களர்கள் என அனைவருக்கும் பொதுவாகச் செயல்பட வேண்டும். அவர், தனது முதல் சுற்றுப்பயணமாக இந்தியா வரவுள்ளார்.
அவரது வருகையின்போது, தமிழக மீனவர்களின் பிரச்சி னைக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றார் வீரமணி.