Published : 28 Jan 2015 09:51 AM
Last Updated : 28 Jan 2015 09:51 AM

வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி வனக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

தங்களுக்கு அளித்த வாக்குறுதியை அரசு நிறைவேற்றவில்லை எனக் கூறி காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர் அரசு வனக் கல்லூரி மாணவ-மாணவியர்.

கோவை மாவட்டம் மேட்டுப் பாளையத்தில் 30 ஆண்டு களாக இயங்கும் அரசு வனக் கல்லூரி உருவாக்கப்பட்டதன் நோக்கம், வனம் சம்பந்தமாக தொழில்நுட்ப மாணவர்களை உருவாக்கி, வனத்தை காப்பாற்ற வேண்டும் என்பதே. இதில் படித்தவர்களுக்கு வனத்துறையிலேயே முன்னுரிமை அளிக்கப்படாமல் இருந்தது.

இதற்காக பல போராட்டங்களை நடத்திய பிறகு கடந்த 2009-ம் ஆண்டு வனத் துறையில் உள்ள வனச் சரகர் பணியிடங்களில் வனவியல் மாணவர்களுக்கு 100 சதவீதம் இடம் ஒதுக்கப்படும் என்று அரசு உத்தரவிட்டது. 2014ம் ஆண்டு இந்த இடஒதுக்கீட்டை 25 சதவீதமாக மாற்றி அரசு உத்தரவு பிறப்பித்தது. அதில், அதிருப்தியுற்று வனக் கல்லூரி மாணவர்கள் கடந்த ஆண்டு 2 வாரங்கள் காலவரையற்ற போராட்டம் நடத்தினர். இதன் விளைவாக சென்னையில் மாணவர் பிரதிநிதிகளுடன் வனத்துறை, வேளாண் துறை அமைச்சர்கள், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

‘இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அது வெளியானதும் 100 சதவீதம் ஒதுக்கீடு செய்து தரப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. தற்போது உயர்நீதி மன்றத் தீர்ப்பு மாணவர்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்து 6 மாதங்கள் கடந்துவிட்டது. ஆனால், எந்த ஒரு பேச்சுவார்த்தையும் இல்லை.

இந்த நிலையில், வனவர் பணிக்காக தற்போது 150க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்படுவதாக தகவல் வந்துள்ளது. அதிலும் பேச்சுவார்த்தைப்படி எங்களுக்கு இடஒதுக்கீடு செய்யப்படவில்லை. எனவே காலவரையற்ற கல்லூரி புறக்கணிப்பை செய்கிறோம் என்று அறிவித்துள்ளனர் வனக் கல்லூரி மாணவர்கள்.

இதற்காக நேற்று காலை வகுப்புகளைப் புறக்கணித்த 150க்கும் மேற்பட்ட மாணவ மாண வியர் கல்லூரி வளாகத்தினுள்- அதாவது வாயிற்கதவுகளுக்கு உள்ளேயும், வகுப்புகளுக்கு வெளியேயும் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சரிடம் மனு

யானைகள் முகாம் நிறைவடைந்த மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பகுதிக்கு வனக் கல்லூரி மாணவப் பிரதிநிதிகள் 5 பேர் நேற்று சென்று, விழாவுக்கு வந்திருந்த உணவு அமைச்சரிடம் (கூடுதல் பொறுப்பு- இந்து சமய அறநிலையத் துறை) கோரிக்கை தொடர்பாக போராட்டம் நடப்பதை தெரிவித்து மனு அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x