

சன் தொலைகாட்சிக்கு 323 நவீன தொலைபேசி இணைப்புகள் முறைகேடாக வழங்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறனின் கூடுதல் தனிச் செயலர் உட்பட மூன்று பேரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு மீதான தீர்ப்பை 27-ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை முதன்மை சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஜெ.கிருஷ்ணமூர்த்தி நேற்று உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் சன் தொலைக்காட்சியின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், எலக்ட்ரீஷியன் கே.எஸ்.ரவி, தயாநிதி மாறனின் கூடுதல் தனிச் செயலர் வே.கவுதமன் ஆகியோரை டெல்லி சிபிஐ அதிகாரிகள் சென்னையில் புதன்கிழமை இரவு கைது செய்தனர். மூவரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி சிபிஐ தாக்கல் செய்த மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஜெ.கிருஷ்ணமூர்த்தி, மனு மீதான தீர்ப்பை 27-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.