தகவல் ஆணையர் முன் எழுந்து நிற்காததால் தகவலறியும் ஆர்வலர் கைது

தகவல் ஆணையர் முன் எழுந்து நிற்காததால் தகவலறியும் ஆர்வலர் கைது
Updated on
2 min read

மாநிலத் தகவல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையராக முன்னாள் தலைமைச் செயலர் ஸ்ரீபதி உள்ளார். மேலும் தமிழ்ச் செல்வன், எஸ்.எப்.அக்பர், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி கிறிஸ்டோபர் நெல்சன் மற்றும் நீலாம்பிகை ஆகியோர் தகவல் ஆணையர்களாக உள்ளனர்.

சட்டப் பஞ்சாயத்து இயக்கத் தலைவர் சிவ.இளங்கோ மீதான புகார் குறித்து, சட்டப் பஞ்சாயத்து இயக்கப் பொதுச் செயலாளர் ஜெகதீஸ்வரன் கூறியதாவது:

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், அரசுத் துறை குறித்த தகவல் ஒன்றைப் பெற, சட்டப் பஞ்சாயத்து இயக்கத் தலைவர் சிவ.இளங்கோ, மாநிலத் தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு தலைமைத் தகவல் ஆணையர் ஸ்ரீபதி முன்பு நேற்று (இன்று) விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிவ.இளங்கோ அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து, தகவல் ஆணையரிடம் தனது தகவல் அறிவது குறித்து முறையிட்டுள்ளார். அப்போது, மனுதாரர் இருக்கையில் அமரக் கூடாது, எழுந்து நிற்க வேண்டும் என்று அங்குள்ள அலுவலர்கள் கூறியுள்ளனர். ஆனால், அவர் எழுந்து நிற்க விதிகள் இல்லை என்று கூறி, எழுந்திருக்க மறுத்துள்ளார்.

அவரை அந்த அறையிலேயே இருக்க வைத்துவிட்டு, தகவல் ஆணையர் மற்றும் அலுவலர்கள் வேறு அறைக்கு சென்று விட்டனர். பின்னர், போலீஸை அழைத்து, அதிகாரிகள் புகார் தெரிவித்தனர். அதன்பேரில், தேனாம்பேட்டை போலீஸார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்து நீதி மன்றக் காவலில் சிறையில் அடைத்துவிட்டனர்.

இந்த நடவடிக்கை தகவல் அறியும் சமூக ஆர்வலர்களை ஒடுக்கும் செயல். சட்டத்தில் மனுதாரர்களை நிற்க வைத்து விசாரிக்க வேண்டுமென்பதில்லை. ஆனால், இங்கே மனித உரிமைகளை மதிக்காமல் நடந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து விசாரித்தபோது தகவலறியும் உரிமை ஆர்வலர்கள் பலர், மாநிலத் தகவல் ஆணைய நடைமுறைகளால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. குறிப்பாக உரிமையியல் நீதிமன்றம் போல் செயல்பட வேண்டிய தகவல் ஆணையம், கிரிமினல்களை விசாரிக்கும் நீதிமன்றம் போல் செயல்படுகிறது என்று சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மனுதாரர்கள் தகவல் கேட்டு வரும் போது, அவர்களை விசாரணை அறையில் வைத்து, சில அலுவலர்கள் ஒருமையில் பேசுவதும், உரிய தகவல்களை அளிக்காமல் அவர்களை அலைக்கழிப்பதும் தொடர்வதாக நீண்ட நாட்களாக குற்றச்சாட்டு உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு அலுவலர்களின் சார்பில் சில சங்கங்களும் புகார் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, இவை அனைத்தையும் உயர் நீதிமன்றத்தில் வழக்காக கொண்டு செல்ல சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

இந்தப் பிரச்சினை குறித்து, தகவல் ஆணைய அலுவலகத்தைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, பிரச்சினை குறித்து போலீஸில் புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்தனர். தேனாம்பேட்டை போலீஸாரிடம் கேட்டபோது, ‘மனுதாரர் எழுந்து நிற்க மறுத்ததால், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகவல் ஆணைய செயலர் அசோக்குமார் புகாரின் பேரில் இளங்கோ மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம்,’என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in