

போலி வழக்கில் தன்னைக் கைதுசெய்து 160 நாள் சிறையில் அடைத்ததற்காக ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கேரள இளைஞர் தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக உள்துறை செயலர், காவல்துறை இயக்குநர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கேரள மாநிலம், கொல்லத் தைச் சேர்ந்த இளைஞர் அனு மோகன். இவரது சகோதரர் அருண், நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள எஸ்.ஏ. ராஜா பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். கல்லூரி நிர்வாகத் தின் அழைப்பின்பேரில் அனு மோகன், உறவினர்கள் இருவரு டன் காரில் கல்லூரிக்குச் சென்ற னர். தென்காசி அருகில் அவர்கள் சென்றபோது, போதைப் பொருள் தடுப்பு போலீஸார் காரை நிறுத்தி உள்ளனர். பின்னர், 3 பேரையும் நெல்லையில் உள்ள தனியார் ஹோட்டலில் அடைத்து வைத்து ரூ. 2 லட்சம் தந்தால் விடுவிப்பதாக வும், பணம் தராவிட்டால் கஞ்சா கடத்தியதாக வழக்கு பதிவு செய்வதாகவும் மிரட்டி உள்ளனர். அப்போது 3 பேரில் ஒருவர் ஹோட்டல் மாடியிலிருந்து குதித்து தப்ப முயன்றதால் விஷயம் வெளியே தெரியவந்தது. இதையடுத்து அனுமோகன் உட்பட 3 பேரையும் 24 கிலோ கஞ்சா கடத்தியதாகக் கூறி கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் சிபிசிஐடி விசாரணைக்கு 2009-ல் மாற்றியது.
சிபிசிஐடி விசாரணையில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு ஆய்வாளர் காந்தி, சார்பு ஆய்வாளர் ராஜமாணிக்கம் மற்றும் காவலர்கள் கண்ணன், மதியழகன், ஸ்டீபன் லூயிஸ் செல்வராஜ், சந்திரன் ஆகியோர் சேர்ந்து கேரளத்தைச் சேர்ந்த 3 பேர் மீதும் கஞ்சா கடத்தியதாக பொய் வழக்கு பதிவு செய்ததும், மேலும், இந்த போலீஸார் ராமநாதபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை கூரியரில் அனுப்பி பணம் கேட்டு, அவர் பணம் தர மறுத்ததால் கைது செய்து சிறையில் அடைத்ததும் தெரியவந்தது.
சிபிசிஐடி போலீஸ் அறிக்கை யால் கஞ்சா வழக்கிலிருந்து அனுமோகன் உட்பட 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். ஆய்வாளர் காந்தி உட்பட 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பொய் வழக்கில் கைது செய்து தங்களை 160 நாள்கள் சிறையில் அடைத்ததற்காக தமிழக அரசிடம் ரூ. 50 லட்சம் இழப்பீடு கேட்டும், இடைக்கால நிவாரணமாக ரூ.10 லட்சம் கேட்டும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அனுமோகன் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி வி.எம்.வேலுமணி முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு தமிழக உள்துறை செயலர், தமிழக காவல்துறை இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.