

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, போயஸ் தோட்ட இல்லத்தில் எம்.ஜி.ஆரின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா, அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலி தாவின் இல்லத்தில் எம்.ஜி.ஆரின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. படத்துக்கு ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில், எம்.ஜி.ஆர். சிலைக்கு, கட்சியின் அவைத் தலைவர் இ.மதுசூதனன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறந்தநாள் சிறப்பு மலரையும் வெளியிட்டார். முதல் பிரதியை அமைச்சர் பி.தங்கமணி பெற்றுக்கொண்டார். விழாவில் அதிமுகவின் அனைத்துப் பிரிவு நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.
தமிழக அரசின் சார்பில் கிண்டி எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த விழாவில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் தமிழக அமைச்சர்கள், சென்னை மாநகர மேயர், எம்எல்ஏக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் படத்துக்கு சிதம்பரம் தொகுதி எம்.பி. சந்திரகாசி, தென்சென்னை தொகுதி எம்.பி., ஜெ.ஜெயவர்தன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதுதவிர தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். ஆங்காங்கே எம்.ஜி.ஆரின் படங்களை மலர்களால் அலங்கரித்து வைத்து மரியாதை செலுத்தினர். ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம், நலத் திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.