

மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு ஆளுநர் ரோசய்யா, முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.
மகாத்மா காந்தியின் 68 வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, மெரினா கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலையின் கீழ் அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டது. மேலும், முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த பந்தலில் சென்னை சர்வோதய சங்கம் சார்பில் பஜனை பாடல்களை பாடினார்கள். காந்தியின் நினைவாக 5 பேர் அங்கு அமர்ந்து ராட்டையில் நூலை நூற்றனர்.
இதையடுத்து, தமிழக ஆளுநர் ரோசய்யா காந்தியின் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சிறிது நேரம் அவர்கள் அங்கு அமர்ந்திருந்து விட்டு சென்றனர். இதேபோல், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு, நடிகை குஷ்பு, முன்னாள் எம்எல்ஏ யசோதா உட்பட பலர் காந்தி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.