

சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து சென்ட்ரல் செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள உயரமான நடைமேம்பாலத்தில் ஆயிரக் கணக்கான முதியோர், மாற்றுத் திறனாளிகள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இது தொடர்பாக ‘தி இந்து’வின் உங்கள் குரலில் வாசகர் எல்.ஆசைதம்பி கூறியிருப்பதாவது:
மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் சென்னை பூங்கா, சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே பொதுமக்கள் சென்று வருவதற்காக தற்காலிகமாக உயரமாக இரும்பு நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பாலத்தை கடந்து செல்கிறார்கள். நடைமேம்பாலம் உயரமாகவும் பெரிய, பெரிய படிகளாகவும் உள்ளது. மேலும், வெயில் நேரத்தில் அந்த இரும்பில் கை பட்டாலே சுடுகிறது. கீழே சாலையை கடக்க வெறு வழி இல்லாததால், இந்த நடைமேம்பாலத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
இதில் முதியோர், மாற்றுத் திறனாளிகள் ஏறிச் செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். எனவே, அவர்களும் பயன்படுத்தும் வகையில் மாற்று ஏற்பாடு செய்துதர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘பார்க் அருகே அமைக்கப்பட்டுள்ள நடைமேம்பாலம் வழியாக பஸ் போன்ற பெரிய வாகனங்கள் கடந்து செல்வதால், வேறுவழியில்லாமல் நடைமேம்பாலம் உயரமாக அமைக் கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதால், அங்கு தற்காலிகமாக நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ரயில்வே பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். பணிகள் முடிந்தவுடன் தற்காலிக பாலம் அகற்றப்படும்.
மேலும், மெட்ரோ ரயில் பணிகளோடு பூங்காவில் இருந்து சென்ட்ரல் மற்றும் ரிப்பன் மாளிகை செல்லும் வகையில் தனியாக நடைபாதைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன’’ என்றார்.