

சென்னை கே.கே.நகர், கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகள் உள்பட நாடு முழுவதும் உள்ள 13 இஎஸ்ஐ மருத்துவ கல்லூரிகளை அந்தந்த மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கத் தயாராக இருப்பதாக மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறினார்.
மத்திய தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா நேற்று சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவ மனையை நேற்று பார்வையிட்டார். பின்னர், அவர் கூறியதாவது:
இந்தியா முழுவதும் 13 இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அவற்றின் கட்டிடப் பணிகளுக்காக மட்டும் இதுவரை ரூ.10,400 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் எஞ்சிய கட்டுமான பணிகளுக்காக ரூ.3,000 கோடி தேவைப்படுகிறது. அந்த கல்லூரிகளின் பராமரிப்புக்கு ஆண்டுக்கு ரூ.80 கோடி வழங்க வேண்டும்.
இஎஸ்ஐ நிறுவனத்தின் தலை யாய பணி, உறுப்பினர்களுக்கு தரமான மருத்துவ சேவை வழங்குவ துதான். எனவே, மருத்துவக் கல்லூரி களை நடத்துவதற்கு இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா என்று யோசிக்கிறோம். எனவே, தமிழ்நாட்டில் உள்ள 2 இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகள் உள்பட நாடு முழுவதும் உள்ள 13 இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளை அந்தந்த மாநில அரசுகளுக்கு பரிசாக வழங்கத் தயாராக உள்ளோம்.
இதுதொடர்பாக மாநில அரசுகளுடன் ஆலோசனை செய் யப்பட்டு வருகிறது. மாநில அரசுகள் தங்கள் இறுதி முடிவை ஜனவரி 31-ம்தேதிக்குள் தெரியப்படுத்திவிட வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் மருத்துவ மாணவ-மாணவிகளின் படிப்பு மற்றும் அங்கீகார பிரச்சினைக்கு விரை வில் தீர்வு காணப்படும். இதுதொடர் பாக மாணவர்கள், மாநில அரசு அதிகாரிகள், இஎஸ்ஐ அதிகாரி கள் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்படும். இந்த குழு டெல்லியில் விரைவில் பேச்சு வார்த்தை நடத்தும்.
தமிழ்நாட்டில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஸ்ரீபெரும்புதூர், திருப்பூர் ஆகிய இடங்களில் தலா ரூ.80 கோடி செலவில் புதிதாக இஎஸ்ஐ மருத்துவமனைகள் அமைக்கப்படும். இதற்கான நிலங் களை தேர்வு செய்யும் பணி முடிந் ததும் பணிகள் தொடங்கப்படும்.
இன்றைய சூழலில் பிளம்பர், கார்பென்டர், எலெக்ட்ரீசியன் என ஏராளமான டெக்னீசியன்கள் தேவைப்படுகிறார்கள். அவர் களுக்கு உலக தரத்திலான தொழில் பயிற்சி அவசியம். இதுதொடர்பாக ஏற்கெனவே ஜெர்மனி, ஆஸ்திரேலியா நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது.
விரைவில் அமெரிக்கா வுடன் ஒப்பந்தம் போடப்படும். தொழிலாளர்களுக்கு சர்வதேச தரத்தில் பயிற்சி அளிக்கும் வகை யில் விரைவில் தேசிய தொழிலாளர் தொழில்கல்வி பல்கலைக்கழகம் அமைக்கப்படும். இதன்மூலம் அவர்களுக்கு தரமான, புதுமை யான தொழில்பயிற்சி அளிக்கப் படும்.
இவ்வாறு மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறினார்.
பேட்டியின்போது இஎஸ்ஐ மண்டல இயக்குநர் பி.பி.மணி, தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன்னதாக, இஎஸ்ஐ மருத்து வக் கல்லூரிகளை மூட முடிவு செய்யப்பட்டிருப்பதால் தங்கள் படிப்பு பாதிக்கப்படுமோ என்று அச்சமடைந்த மாணவ, மாணவி கள் கல்லூரி வளாகத்தில் உள் ளிருப்பு போராட்டம் நடத்தினர். அவர் களுடன் அமைச்சர் பேச்சு வார்த்தை நடத்தினார்.
ஐ.டி. பணியாளர்கள் பிரச்சினை
டிசிஎஸ், தகவல் தொழில்நுட்ப (ஐடி) பணியாளர்கள் வேலைநீக்கம், நோக்கியா, ஃபாக்ஸ்கான் பன்னாட்டு நிறுவனங்கள் மூடப்பட்ட பிரச்சினை குறித்து மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறும்போது, "தொழிலாளர் விவகாரம் என்பது பொதுப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசுகளும் இதுதொடர்பான பிரச்சினை மீது நடவடிக்கை எடுக்க முடியும். அதற்காக பல்வேறு தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்கள் உள்ளன. இந்த பிரச்சினை குறித்து மத்திய அரசும் ஆலோசிக்கும். பன்னாட்டு நிறுவனங்கள் நிறுவப்படும்போது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கும். அந்த விதிமுறைகளையும் ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது" என்றார்.