Published : 29 Apr 2014 08:13 AM
Last Updated : 29 Apr 2014 08:13 AM

பாக்கி நிலுவை: மின்வாரியம் மீது 34 நிறுவனங்கள் வழக்கு - ஒழுங்குமுறை ஆணையத்தில் விசாரணை தொடக்கம்

மின்சாரம் வாங்கியதற்கான பாக்கித் தொகையை வட்டியுடன் செலுத்த தமிழக மின் வாரியத்துக்கு உத்தரவிடுமாறு கோரி ஒழுங்கு முறை ஆணையத்தில் 34 தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளன.

தமிழக மின் வாரியத்துக்குட்பட்ட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், பல்வேறு வழிகளில் மின்சாரம் உற்பத்தி செய்து, தமிழகம் முழுவதும் விநியோகம் செய்து வருகிறது. அனல் மின் நிலையங்கள், நீர் மின் நிலையங்கள், அணு மின் நிலையங்களுடன் காற்றாலை மின் நிலையங்களிலிருந்தும் மின்சாரம் பெறப்படுகிறது.

இதற்காக, தமிழக அரசுக்கு சொந்தமான வடசென்னை, எண்ணூர், தூத்துக்குடி, மேட்டூர் மற்றும் தமிழகத்திலுள்ள நீர் மின் நிலையங்களைத் தவிர மற்ற மின் நிலையங்களின் மின்சாரத் துக்கு தமிழக அரசு ஒப்பந்த அடிப் படையில் மின்சாரக் கொள்முதல் கட்டணம் செலுத்துகிறது. மத்திய அரசின் மின் நிலையங்கள், தமிழக, மத்திய கூட்டு ஒப்பந்த மின் நிலையங்கள், தனியார் மின் நிலையங்கள், காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு தமிழக மின் வாரியம், மின்சாரக் கட்டணம் செலுத்தி வருகிறது.

கடந்த நிதியாண்டு கணக்கு மார்ச்சுடன் முடிந்துள்ள நிலையில், தமிழக மின் வாரியம் செலுத்த வேண்டிய மின் கட்டண பாக்கி ரூ.1,500 கோடியாக அதிகரித் துள்ளது. இதனால், மின்சாரம் உற்பத்தி செய்யும் 34 தனியார் நிறுவனங்கள், தங்களுக்கு கொள்முதல் கட்டண பாக்கியை கேட்டு பலமுறை மின்சார வாரியத்துக்கு கடிதம் எழுதின. ஆனால், மின் வாரியத்தின் நிதி நிலை மோசமாக உள்ளதால், பாக்கித் தொகை தொடர்ந்து நிலுவையிலேயே உள்ளது.

இதையடுத்து, தனியார் நிறுவனங்கள் தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளன.

இந்தியா பேஷன்ஸ் லிமிடெட், மாரீஸ் ஹோட்டல்ஸ், ஸ்பேரோ மின் உற்பத்தி நிறுவனம், பி.எம்.கிரானைட், ஓம் சக்தி காற்றாலை மின் உற்பத்தி நிறுவனம், பவாரிகா நிறுவனம், விவிடி நிறுவனம் உள்ளிட்ட 34 நிறுவனங்கள் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்துள்ளன.

இந்த வழக்குகள் அனைத்தும் ஏப்ரல் 11-ம் தேதி விசாரணைக்கு வருவதற்காக பட்டியலிடப்பட் டிருந்தன. ஆனால் தேர்தல் காரணமாக விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் முதல் விசாரணை தொடங்கியது.

வழக்குத் தாக்கல் செய்த நிறுவனங்கள், பாக்கித் தொகையு டன் ஒரு சதவீத வட்டியும் சேர்த்து தர உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.

இதுகுறித்து, மின் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மின் வாரிய நிதி நிலை மிகவும் மோசமாக இருப்பதால், ஒரே நேரத்தில் அனைத்து நிறுவனங்களுக்கும் பணம் கொடுக்க முடியாத சூழல் உள்ளது. மேலும் தனியார் நிறுவனங்களிடம் இதுகுறித்து பேசியுள்ளோம். மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திலும் பதில் மனு தாக்கல் செய்ய உள்ளோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x