

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் வேட்பாளரின் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்டால், அந்தக் கூட்டத்துக்கான செலவை வேட்பாளரின் கணக்கில்தான் சேர்க்க வேண்டும் என்பதை உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தேர்தல் ஆணையம் நீண்டகாலமாக நடை முறைப்படுத்தி வருகிறது என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமி தெரிவித்தார்.
விளம்பரம் மற்றும் காட்சி இயக்குநரகம், தேசிய எழுத்தறிவு இயக்கக ஆணையம் மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து மெரினா கடற்கரை சாலை, உழைப்பாளர் சிலை அருகே தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்தக் கண்காட்சி, ஞாயிற்றுக்கிழமை வரை நடக்கிறது. கண்காட்சியை முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமி திறந்து வைத்தார்.
‘சிந்தித்து வாக்களியுங்கள்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட 50 ஆயிரம் ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டும் பணியையும் அவர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் விக்ரம் கபூர், ஆட்சியர் மற்றும் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் சுந்தரவல்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
1950-ல் நடந்த முதல் மக்களவைத் தேர்தல், வடகிழக்கு மாகாணங்கள், மலைப் பிரதேசங்களில் நடந்த தேர்தல்கள் பற்றிய தகவல்கள், புகைப்படங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. நிகழ்ச்சிக்குப் பிறகு நிருபர்களிடம் என்.கோபாலசாமி கூறியதாவது:
தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது, வேட்பாளர் பெயரைச் சொல்லி வாக்கு சேகரித்தால், அந்தப் பிரச்சாரக் கூட்டத்துக்கான செலவுகள் முழுவதும் வேட்பாளரின் செலவுக் கணக்கில்தான் சேர்க்கப்படும். வேட்பாளரின் பெயரைச் சொல்லாமல் கட்சியின் திட்டங்கள், செயல்பாடுகள் பற்றி விளக்கிப் பேசினால், அந்தக் கூட்டத்துக்கான செலவு, கட்சியின் தேர்தல் செலவில் சேர்க்கப்படும் என்று 1975-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன் வழிகாட்டுதல்படி அன்றிலிருந்தே இதை தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருகிறது. இது ஒன்றும் புதிய நடைமுறை இல்லை. முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இது தெரியாததல்ல. கட்சியினர் இரவு 10 மணிக்கு மேல் பொதுக்கூட்டங்களைத் தவிர்த்து வேறு முறையில் பிரச்சாரம் செய்யலாம். ஆனால், அந்தப் பிரச்சாரம் வாக்காளர்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது.
நக்சல் தீவிரவாதம் உள்ள பகுதிகளிலும் ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையர்கள் செயல்படுத்தி வருகின்றனர். இது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பைக் காட்டுகிறது. இவ்வாறு கோபாலசாமி கூறினார்.