Published : 28 Jan 2015 09:57 AM
Last Updated : 28 Jan 2015 09:57 AM

சென்னை திருவல்லிக்கேணியில் தமிழ் தாத்தா உ.வே.சா வாழ்ந்த இடத்தில் நினைவு இல்லம் அமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

சென்னையில் உ.வே.சா வாழ்ந்த இடத்தில் நினைவு இல்லம் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன்பேட்டையில் தமிழ் தாத்தா உ.வே.சா. வாழ்ந்த இல்லம் கடந்த மாதம் 13-ம் தேதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. தமிழுக்கு உ.வே.சாமிநாதய்யர் ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றவை. 1874-ம் ஆண்டு தமது 19-வது வயதில் ஓலைச்சுவடிகளை புத்தகமாக்கும் பணியைத் தொடங்கிய உ.வே.சா. தமது வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை சுமார் 68 ஆண்டுகளை ஓலைச்சுவடிகளைத் தேடிக் கண்டு பிடித்து பதிப்பிக்கும் பணிக்காகவே அர்ப்பணித்துக் கொண்டார்.

இத்தகைய பெருமைக்குரிய தமிழ் தாத்தா சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றிய போது முதலில் வாடகைக்கு இருந்து பின்னர் விலைக்கு வாங்கிய வீடு தான் இடிக்கப்பட்டிருக்கிறது. உ.வே.சா.வின் மறைவுக்குப் பிறகு அவரது உறவினர்களால் விற்கப்பட்ட அந்த வீட்டை இடிப்பதற்கான முயற்சிகள் கடந்த 2012 செப்டம்பர் மாதத்திலேயே மேற்கொள்ளப்பட்டன.

அப்போது பாதி இடிக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து தமிழறிஞர்கள் குரல் கொடுத்ததால் காப்பாற்றப்பட்டது. அப்போதே அந்த வீட்டை உ.வே.சா. அவர்களின் நினைவு இல்லமாக பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. அதை தமிழக அரசு ஏற்றிருந்தால் தமிழுக்கு தொண்டு செய்த தமிழ் தாத்தாவின் இல்லம் பாதுகாக்கப்பட்டிருக்கும். ஆனால், அரசின் அலட்சியத்தால் உ.வே.சா.வின் வீடு தரை மட்டமாக்கப்பட்டது. இதன்பிறகாவது திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன்பேட்டையில் தமிழ் தாத்தாவின் இல்லம் அமைந்திருந்த இடத்தை தமிழக அரசு விலைக்கு வாங்கி அங்கு அவருக்கு நினைவு இல்லம் அமைக்க வேண்டும்.

தமிழ் தாத்தா பிறந்த உத்தமதானபுரம் இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டிருக்கிறது என்ற போதிலும் திருவல்லிக்கேணியில் அவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்த வீட்டையும் நினைவு இல்லமாக மாற்றுவதே சரியானதாக இருக்கும். உ.வே.சா அவர்களின் 160-வது பிறந்த நாள் அடுத்த மாதம் 19-ம் தேதி கொண்டாடப்படவிருக்கும் நிலையில், அந்த நாளில் அவரது நினைவு இல்லத்துக்கு அடிக்கல் நாட்டப்பட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x