காங்கிரஸ் ஆட்சியில்தான் அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் போடப்பட்டது: சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு தகவல்

காங்கிரஸ் ஆட்சியில்தான் அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் போடப்பட்டது: சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு தகவல்
Updated on
1 min read

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், 10 ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரஸ் ஆட்சியில்தான் போடப்பட்டது என்று நடிகை குஷ்பு தெரிவித்தார்.

நூறு நாள் வேலைத் திட்டத்தை முடக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது:

மோடி தலைமையிலான பாஜக அரசு, ஏழை எளிய மக்களை வாழவிடக்கூடாது என்று நினைக்கிறது. காங்கிரஸ் அரசு கொண்டு வந்த 100 நாள் வேலை திட்டத்தை முடக்க பாஜக அரசு முயற்சி செய்துவருகிறது.

தமிழகத்தில் 330 வட்டாரங்களில் செயல்பட்டு வந்த 100 நாள் வேலைத் திட்டம், இப்போது 64 வட்டாரங்களில் மட்டுமே செயல்படும் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்களும் விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மோடி அரசை தூக்கி எறிவதே இந்திய மக்களுக்கு நல்லதாகும்.

இவ்வாறு இளங்கோவன் பேசினார்.

நடிகை குஷ்பு பேசியதாவது:

காங்கிரஸ் அரசு அறிமுகப்படுத் திய நூறு நாள் வேலைத் திட்டத்தை பாஜக அரசு முடக்க நினைக்கிறது. இந்த திட்டத்தால் ஏராளமான ஏழைப் பெண்கள் பயன்பெற்று வந்தனர். இதற்கு தற்போது வேட்டு வைக்கப் பார்க்கிறார்கள். இதனால் ஏழைகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் உள்ளது.

பாஜக அரசு கடந்த 7 மாதத்தில் என்ன சாதித்தது? முந்தைய காங்கிரஸ் அரசால் செயல்படுத்தப்பட்ட திட்டங்களைத்தான் மோடியும் செயல்படுத்தி வருகிறார். இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரஸ் அரசுதான் மேற்கொண்டது. அதில் ஒபாமாவுடன் மோடி கையெழுத்து மட்டும்தான் போட்டுள்ளார்.

இவ்வாறு குஷ்பு பேசினார்.

எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு தலைவர் கு.செல்வப்பெருந்தகை உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். திமுகவில் இருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்த குஷ்பு, முதல்முறையாக கட்சி நடத்திய போராட்டத்தில் பங்கேற்றார். தோள்பட்டை பிரச்சினையால் கையில் கட்டு போட்டு வந்திருந்த குஷ்பு, பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in