Published : 03 Apr 2014 05:35 PM
Last Updated : 03 Apr 2014 05:35 PM

தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து அதிமுக சார்பில் வழக்கு: நாமக்கல் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேச்சு

தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து அதிமுக சார்பில் வழக்குத் தொடரப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக நாட்டில் முதலீடுகள் குறைந்துள்ளன. ஏற்றுமதியும் குறைந்துள்ளது. நடப்புக் கணக்கில் அதிக பற்றாக்குறை ஏற்பட்டு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.

இதிலிருந்து விடுபட மாறுதல் தேவை. அதற்கு வழிவகுப்பது வரும் நாடாளுமன்றத் தேர்தல். வரும் நாடாளுமன்றத் தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் மட்டுமல்ல, நாட்டின் தலையெழுத்தையும், மக்களின் தலைவிதியையும் மாற்றிய மைக்கும் தேர்தல். மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. ஏறத்தாழ 17 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த திமுக, தமிழ்நாட்டுக்கு என்ன நன்மை செய்துள்ளது? திமுக, காங்கிரஸ் கட்சிக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.

திமுகவினர் விரக்தி

தமிழகம் முழுவதும் நான் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறேன். எனது பிரச்சாரத்தைக் கேட்க மக்கள் குவிகின்றனர். இந்த விரக்தியில்தான், ஆள்கள் அழைத்து வரப்படுகிறார்கள் என்று திமுக-வினர் பொய்யான தகவலைப் பரப்புகின்றனர்.

தேர்தல் ஆணையம் இதற்கு தடை விதிப்பது விந்தையாக உள்ளது. வேட்பாளரை அறிமுகம் செய்வது மட்டுமின்றி, வேட்பாளர் பெயரைக் கூறினாலும், அந்தப் பிரச்சாரக் கூட்டத்துக்கான செலவு வேட்பாளரின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது நியாயமற்றது.

ஒரு நாடாளுமன்றத் தொகுதி என்பது ஒரு மாவட்டத்துக்கு இணையானது. அப்படியிருக் கும்போது, நட்சத்திரப் பேச்சாளர் ஒரு கூட்டத்தில் பேசுவதைக் கேட்கவும், பார்க்கவும் மக்கள் பல வாகனங்களில், அவர்களது சொந்த செலவில் வருவது இயல்பு. அதேபோல் கூட்டம் நடைபெறும் இடங்களில் பதாகைகள் வைப்பதும் வழக்க மான அரசியல் கலாச்சாரம்தான்.

வேட்பாளர் பெயரை கூற முடியவில்லை!

தற்போது தேர்தல் ஆணையம் திடீரென் தடை விதித்துள்ளதால், அதிமுக வேட்பாளரே மேடைக்கு வர முடியாத சூழல் உள்ளது. தேர்தல் ஆணைய உத்தரவு ஜனநாயகத்துக்குப் புறம்பானது. இதனால் வேட்பாளர் பெயரைக் கூட உச்சரிக்க முடியவில்லை. தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து அதிமுக சார்பில் வழக்குத் தொடரப்படும். இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

தேமுதிக ‘மாஜி’ வேட்பாளர் அதிமுக-வில் ஐக்கியம்

நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்கு முதலில் தேமுதிக வேட்பாளராக, அக்கட்சியின் மாநில மாணவரணி துணைச் செயலர் என்.மகேஸ்வரன் அறிவிக்கப்பட்டார். ஆனால், உடல்நலக் குறைவை காரணம் காட்டி, அவர் தேர்தலில் போட்டியிடாமல் விலகினார்.

இந்நிலையில், அவர் தேமுதிக-வில் இருந்து விலகி, நாமக்கல்லில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுக-வில் இணைந்தார். இவர், கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக சார்பில் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x