

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி 27-ம் தேதி முடிவடைகிறது.
கடந்த 2011-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். கடந்த செப்டம்பர் மாதம் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதால், அவர் தனது எம்எல்ஏ பதவி மற்றும் முதல்வர் பதவியை இழந்தார். இதையடுத்து தேர்தல் ஆணையம் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதிக்கு பிப்ரவரி 13-ம் தேதி தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 16-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவு அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இடைத்தேர் தலுக்கான வேட்புமனு தாக் கல் இன்று தொடங்கி 27-ம் தேதி முடிவடைகிறது. வரும் 25-ம் தேதியும் (ஞாயிற்றுக்கிழமை), 26-ம் தேதியும் (குடியரசு தினம்- விடுமுறை) வேட்பு மனுதாக்கல் கிடையாது.
வேட்பு மனுக்கள் பரிசீலனை வரும் 28-ம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற ஜனவரி 30-ம் தேதி கடைசி நாள்.
திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், சோழன் நகரில் அமைந்துள்ள ரங்கம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், திருவானைக்கா டிரங்க் ரோட்டில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்திலும் வேட்பு மனுக்கள் பெறவும், சமர்ப்பிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வேட்பு மனு விண்ணப்பப் படிவங்கள் சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்துள்ளன.
3 அடுக்கு பாதுகாப்பு
வேட்புமனு தாக்கல் தொடங்குவதையொட்டி ரங்கம் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் அலுவலர் அலுவலகங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வேட்பாளருடன் 4 பேர் வரலாம். மொத்தம் 5 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்யும்போது அலுவலகத்தின் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். வேட்பாளருடன் 3 வாகனங்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய வரலாம். தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் எஸ்.வளர்மதி வேட் பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். திமுக சார்பில் ஏற்கெனவே ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த என். ஆனந்த் நிறுத்தப்பட்டுள்ளார்.
பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்னும் முடிவை அறிவிக்கவில்லை. இடைத்தேர்தலையொட்டி திருச்சி மாவட்டம் மற்றும் அதன் அருகி லுள்ள புதுக்கோட்டை மாவட்டத் தில் ஒரு ஊராட்சியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப் பட்டுள்ளன. கட்சிகள், வேட்பாளர் கள், அமைச்சர்களுக்கு 91 வகை யான கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேற்பார்வையாளர்கள் இன்று அறிவிப்பு
தேர்தல் துறை அதிகாரிகளுடன், தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் சென்னையில் இருந்து ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார். இந்தக் கூட்டத்துக்கு பிறகு, தேர்தல் செலவுக்கான மேற்பார்வையாளர் மற்றும் தேர்தல் பார்வையாளர் குறித்த விவரம் வெளியிடப்படும். தேர்தல் பார்வையாளர்கள் இன்று மாலை அல்லது நாளை ஸ்ரீரங்கம் தொகுதிக்கு செல்வர் என தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.