

தேர்வு செய்யப்பட்டுள்ள 10 மாவட்ட சாலைகளை ரூ.1,819 கோடி செலவில் விரிவாக்கம் மற்றும் தரம் உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக உலக வங்கியுடன் நெடுஞ்சாலைத்துறை விரைவில் ஒப்பந்தம் போட்டு, மார்ச் மாதத்தில் பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால், நெடுஞ்சாலைகளை இணைக்கும் முக்கிய மாவட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில இடங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நேரிடுகிறது. இதற்காக சாலைகளை மேம்படுத்துவதும், விரிவாக்கம் மற்றும் வடிவமைப்பை மாற்றுதல் உள்ளிட்டவை அவசியமாக இருக்கிறது.
நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட பொறியாளர்கள் குழு, பல்வேறு மாவட்ட சாலைகளில் ஆய்வு மேற்கொண்டு அரசிடம் அறிக்கை வழங்கியது. இதற்கிடையே, தேர்வு செய்யப்பட்ட 10 சாலைகளில் விரிவாக்கம், பராமரிப்பு, வளைவுகளை சரிசெய்தல் உள்ளிட்ட பணிகள் மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ளது.
காஞ்சிபுரம் – வந்தவாசி (22 கி.மீ), சட்ராஸ் – செங்கல்பட்டு (26 கி.மீ), ஆற்காடு – விழுப்புரம் (82 கி.மீ), மடப்பட்டு – திருக்கோவிலூர் (28 கி.மீ), விருத்தாசலம் – பரங்கிப்பேட்டை (35.80 கி.மீ), திருச்செங்கோடு – பரமத்தி (26 கி.மீ), மல்லியகரை – ராசிபுரம் – திருச்செங்கோடு – ஈரோடு (50.50 கி.மீ), மோகனூர் – நாமக்கல் (13 கி.மீ), நாங்குநேரி – பாரதவரம் – ஓவரி (35 கி.மீ), நடுவப்பட்டி – எட்டயபுரம் (31 கி.மீ), ராஜபாளையம் – சங்கரன்கோவில் – திருநெல்வேலி (75 கி.மீ) என மொத்தம் 427 கி.மீ தூரத்துக்கு ரூ.1,819 கோடியில் சாலைகள் விரிவாக்கம், வளைவுகள் சரிசெய்தல், சேதமடைந்த சாலைகளை தரம் உயர்த்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதுதொடர்பாக நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “மாவட்ட சாலைகளில் இருந்து நெடுஞ்சாலைகளுக்கு செல்லும் இணைப்பு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை குறைப்பதற்காக இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தற்போது உள்ள 7 மீட்டர் அகலம் கொண்ட சாலையை 10 மீட்டராக விரிவாக்கம் செய்ய உள்ளோம். தேவையற்ற சாலை வளைவுகளை சரிசெய்யவும் திட்டமிட்டுள்ளோம். மொத்தம் ரூ.1,819 கோடி செலவில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதற்கான கடன் பெற உலக வங்கியுடன் பிப்ரவரியில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். இதையடுத்து, மார்ச் மாதத்தில் பணிகள் தொடங்கப்படும். பின்னர், படிப்படியாக திட்டமிட்டுள்ள பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.