வனக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்: மரங்களை தழுவி கோரிக்கை முழக்கம்

வனக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்: மரங்களை தழுவி கோரிக்கை முழக்கம்
Updated on
1 min read

மரங்களை தழுவிக் கொண்டு தங்கள் குறைகளை முறையிட்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பி வினோதப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர் கோவை வனக் கல்லூரி மாணவ-மாணவியர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் தமிழ்நாடு வேளாண்மைக் கழகத்தின் கீழ் இயங்கும் அரசு வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த கல்லூரியில், வனவியல் சம்பந்தமான பி.எஸ்.சி, எம்.எஸ்.சி., பிஎச்டி போன்ற படிப்புகளை 213 மாணவ மாணவிகள் கற்று வருகின்றனர். இவர்களுக்கு எந்த ஒரு இட ஒதுக்கீடும் இல்லாத நிலையில் தொடர்ந்து போராடுகின்றனர்.

கடந்த 2009-ம் ஆண்டு வனத்துறை ரேஞ்சர் பதவிக்கு 100 சதவீதம் வனவியல் மாணவர்களே பணியமர்த்தப்படுவர் என்று அரசு அறிவித்தது. அதனை, 2014-ம் ஆண்டில் மாற்றி, 25 சதவீத பணியிடங்களே வனவியல் மாணவர்களுக்கு என அறிவித்தது அரசு.

இதற்காக காலவரையற்ற போராட்டத்தை மாணவர்கள் அப்போது நடத்தினர். இது தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளியானதும், 100 சதவீதம் ஒதுக்கீடு தரப்படும் என்று வாக்குறுதி அளித்தனர் ஆட்சியாளர்கள். மாணவர்களுக்கு சாதகமாக 6 மாதங்களுக்கு முன்பே உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்துவிட்டது. ஆனால், தங்களுக்கு சாதகமான அறிவிப்பை அரசு வெளியிடவில்லை. அதே சமயம் வனவர் பணிக்காக தற்போது 150க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யும் அறிவிப்பு வந்ததால், கடந்த 27-ம் தேதி வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் கல்லூரியையும், விடுதிகளையும் மூடியது நிர்வாகம்.

தற்போது தங்கள் உடமைகளை எடுத்து வந்து வளாகத்தினுள்ளேயே அமர்ந்து இரவு பகல் பாராது தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் மரக் கன்றுகளுக்கு ராக்கி கட்டி போராட்டம் நடத்திய மாணவர்கள், நேற்று மரங்களை தழுவிக் கொண்டு தங்கள் கோரிக்கைகளை மரத்திடம் கூறி, கோஷமிட்டு போராட்டங்களைத் தொடர்ந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கூறுகையில், ‘வனச்சரகர் பதவிக்கு 100 சதவீதம் தந்த இட ஒதுக்கீட்டை 25 சதவீதம் ஆக்கினார்கள். அதனை மீண்டும் 100 சதவீதமாகவே மாற்றி உத்தரவிட வேண்டும். தற்போது, வனவர் பணி நியமனத்துக்கு 181 பேர் தேர்வு செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். இப்போதோ, வனப் பணியாளர் தேர்வுக் குழு அமைத்து அதன்மூலம் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலும் எங்களுக்கான இட ஒதுக்கீடு இல்லை. இதுவும் வனம் சார்ந்த பணியிடம் என்பதால் எங்களுக்கே 100 சதவீதம் ஒதுக்கீடு செய்து அறிவிக்க வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்’ என்று தெரிவித்தனர்.

வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் அமைந்துள்ள கல்லூரியில் மூன்றாவது நாளாக இரவு நேரங்களில் கூட 213 மாணவ, மாணவிகள் போராட்டத்தை தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in