

கரூர் அருகே சைக்கிளில் பள்ளி சென்ற மாணவியை அவரது தந்தையின் கண் முன்னே கத்தியால் குத்திக்கொன்ற இளைஞர், தானும் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகேயுள்ள ரங்கபாளையத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன், கொத்தனார். இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு 2 மகள்கள். மூத்த மகள் பாரதிப்ரியா(14) சின்னதாராபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் மனோஜ்(25), கொத்தனார்.
மனோஜ் தன்னை தொந்தரவு செய்வதாகக் கூறி பாரதிப்ரியா கடந்த ஜன.3-ம் தேதி வீட்டில் தெரிவித்துள்ளார். இதையடுத்து சின்ன தாராபுரம் போலீஸில் ஈஸ்வரன் மறுநாள் புகார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பாரதிப்ரியாவை தொந்தரவு செய்யக்கூடாது என மனோஜிடம் போலீஸார் எச்சரித்ததுடன் எழுதி வாங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்து சைக்கிளில் பள்ளிக்கு பாரதிப்ரியா புறப்பட்டுள்ளார். அவரை பின்தொடர்ந்து ஈஸ்வரன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் சென்ற மனோஜ், ஈஸ்வரனை கடந்து பங்களா தோட்டம் என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்த பாரதி ப்ரியாவை கத்தியால் குத்தியுள்ளார். அதன்பின் தன்னையும் கத்தியால் குத்திக்கொண்டுள்ளார்.
இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், ஈஸ்வரன் ஆகியோர் பாரதிப்ரியா, மனோஜ் ஆகிய இருவரையும் சிகிச்சைக்காக கரூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே பாரதிப்ரியா உயிரிழந்தார். கரூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மனோஜ், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல் கண்காணிப்பாளர் ஜோஷி நிர்மல்குமார், துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சின்னதாராபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலியான மாணவியின் உடல் வைக்கப்பட்டிருந்த கரூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கின் முன் திரண்ட ஜனநாயக மாதர் சங்கத்தினர் மறியலில் ஈடுபட முயன்றனர். கரூர் வருவாய் கோட்டாட்சியர் கார்த்திகேயன் பேச்சுவார்த்தை நடத்தி மறியல் முயற்சியை கைவிடச் செய்தார்.
ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலர் அன்ன காமாட்சி கூறியபோது, “பள்ளி மாணவிகள் மீதான தாக்குதல் அதிகரித்துவருகிறது. உயிரிழந்த மாணவி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். மாணவியைக் கொன்றவரை கடுமையாக தண்டிக்க வேண்டும். இது மற்றவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்” என்றார்.