

காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தை அடுத்த நெற்குணம் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. 122 மாணவ-மாணவிகள் படிக்கும் இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 6 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இந்த பள்ளியில் கணக்கு ஆசிரியராக இருந்த ஜெயபாண்டியன் என்பவரை, மாவட்ட கல்வி நிர்வாகம் சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்துக்கு கூடுதல் பணிக்காக கடந்த ஜூன் மாதம் மாற்றியதாக கூறப்படுகிறது.
இதனால், அவர் தினமும் பள்ளியில் கையெழுத்திட்டுவிட்டு, சென்னைக்கு பணிக்கு செல்வதால், மாணவர்களுக்கு கணக்கு பாடம் சரிவர நடத்தப்படுவதில்லை என்று புகார் எழுந்துள்ளது. இதனால், தேர்வின்போது மாணவர்கள் தோல்வியடையும் நிலை உள்ளதாக குற்றம்சாட்டிய மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: கணக்கு ஆசிரியர் இல்லாததால், மாணவர்கள் அந்த பாடத்தில் மிகவும் பின் தங்கியுள்ளனர். கூடுதல் பணிக்காக ஆசிரியர் சென்னைக்கு செல்லும் நிலையில், மாற்று ஆசிரியரை நியமிக்கவில்லை. இதனால், பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர். மாற்று ஆசிரியரை நியமிப்பதாக அளித்த உறுதி மொழியை ஏற்று பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.