தமிழகம் முழுவதும் 3.48 லட்சம் போலி குடும்ப அட்டைகள் ரத்து: ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் தகவல்

தமிழகம் முழுவதும் 3.48 லட்சம் போலி குடும்ப அட்டைகள் ரத்து: ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் தகவல்
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 48 ஆயிரத்து 25 போலி குடும்ப அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக உணவுத்துறை ஆய்வுக் கூட்டத் தில் அமைச்சர் காமராஜ் தெரி வித்தார்.

இதுகுறித்து தமிழக அரசின் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குடும்ப அட்டைகளில் உள்தாள் ஒட்டும் பணி நிறைவு மற்றும் பொது விநியோக திட்ட செயல்பாடுகள் குறித்த மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், சேப்பாக்கம் எழிலக வளாக கூட்டரங்கில் நேற்று நடந்தது. உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தலைமையில் நடந்த கூட்டத்தில், துறையின் முதன்மைச் செயலாளர் முகம்மது நசிமுதீன், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் கோபாலகிருஷ்ணன், நுகர் பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் எம்.சந்திரசேகரன்,உணவுப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறை கூடுதல் இயக்குநர் கே.ராதாகிருஷ்ணன் மற்றும் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை ஓராண்டுக்கு நீட்டிக்கும் வகையில் உள்தாள் ஒட்டும் பணி நடப்பது குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார். ஒரு கோடியே 91 லட்சத்து 94 ஆயிரத்து 781 அட்டைகளில் உள்தாள் ஒட்டும் பணி (97 சதவீதம்) நிறைவடைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். உள்தாள் இணைப்புக்கு காலக்கெடு ஏதும் இல்லாததால், மீதமுள்ள குடும்ப அட்டைதாரர்களும் விரைவில் தங்களின் அட்டைகளில் உள்தாள் ஒட்டி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

எந்தப் பொருளும் வேண்டாத ஏனைய அட்டைதாரர்களும் தங்களின் குடும்ப அட்டைகளை www.consumer.tn.gov.in என்ற இணையதளத்தில் மார்ச் 31 வரை புதுப்பித்துக்கொள்ள வசதி செய்து தரப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் கடந்த டிசம்பர் 31-ம் தேதி வரை 11 லட்சத்து 43 ஆயிரத்து 642 புதிய குடும்ப அட்டைகளை அரசு வழங்கியுள்ளது. 3 லட்சத்து 48 ஆயிரத்து 25 போலி குடும்ப அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டன என்று அமைச்சர் தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருள் களின் கடத்தல் தடுப்பு நடவடிக் கைகள் முடுக்கி விடப்பட்டு, இன்று வரை 21,508 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 632 பேர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in