Published : 19 Apr 2014 03:22 PM
Last Updated : 19 Apr 2014 03:22 PM

தனுஷ்கோடியை புறக்கணிக்கும் ராமநாதபுரம் வேட்பாளர்கள்

தமிழகத்தில் பல கிராம மக்கள் தங்கள் கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லை, போக்குவரத்து வசதி இல்லை, குடிநீர் வசதி இல்லை என கூறி தங்கள் கிராமங்களில் கருப்பு கொடிகள் கட்டி, போஸ்டர்கள் ஒட்டி தேர்தல் புறக்கணிப்பை செய்து வருகின்றனர்.

ஆனால், ராமநாதபுரம் நாடாளுமன்ற வேட்பாளர்கள் பாரம்பரியமான துறைமுக நகரமான தனுஷ்கோடியில் வாக்குககள் சேகரிக்க செல்லாமல் புறக்கணித்து வருகின்றனர்.

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் துறைமுகம், அதனருகே ரயில்வே நிலையம், நிரம்பி வழியும் சுற்றுலாப் பயணிகள், இருபுறமும் நீலவர்ணத்தில் கடலும் இதமான காற்றும், தேனியைப் போன்று சுறுசுறுப்பாக எந்த நேரமும் மீன்களைப் பிடிக்கும் மீனவர்கள் இதுதான் தனுஷ்கோடி. ஆனால் இது எல்லாம் பழையக்கதை.

1964-ம் ஆண்டு டிசம்பர்-22ந்தேதி அன்று இரவு கோரப்புயல் தனுஷ்கோடியைத் தாக்கியது. அன்று வீசிய புயலில் இந்தியாவின் தேசப் படத்திலிருந்து தனுஷ்கோடி துறைமுகமே காணாமல் போயிற்று. அந்தக் கோரப் புயலின் தாக்கி 50 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை தனுஷ்கோடி மீளவே இல்லை.

தனுஷ்கோடியில் தற்போது இருநூறுக்கும் மேற்பட்ட பாரம்பரியமான மீனவக் குடும்பங்கள் தங்களின் தாயகத்தை விட்டு செல்லாமல் ஓலைக் குடிசையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ரேசன் கார்டு முதல் வாக்களர் அடையாள அட்டைகள் வரையிலும் வழங்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு மூன்றாம் சத்திரம் வரை மட்டுமே சாலை வசதியுள்ளது. மூன்றாம் சத்திரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு சுமார் எட்டு கிலோமீட்டர் வரையிலும் கடற்கைரை ஓரத்தில் நடந்தே தான் செல்ல வேண்டும். தனுஷ்கோடியில் மின்சார வசதி, மருத்துவ வசதி, தகவல் தொடர்பு வசதி, குடிநீர் வசதி என்று அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாமல் மீனவ மக்கள் சிரமத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் 23 சுயேச்சை வேட்பாளர்கள் (இதில் 4 பெண்கள்) உள்பட மொத்தம் 31 பேர் போட்டியிடுகின்றனர். ஆனால் தேர்தல் நாள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வேட்பாளர் கூட நேரில் வந்து வாக்குகள் சேகரிக்கவில்லை என்கிறனர் தனுஸ்கோடி வாழ் மீனவ மக்கள்.

இதுகுறித்து தனுஷ்கோடியில் வசித்து வரும் மீனவப் பெண் நம்பு கூறுகையில் கூறுகையில், '' எனக்கு 40 வயசாச்சு. நான் பிறந்து, வளர்ந்தது, திருமணம் முடித்தது எல்லாம் தனுஷ்கோடியில்தான். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இந்தப் பகுதியில் மின்சாரம் கிடையாது, சாலை வசதி கிடையாது, குடிக்க குடிநீர் குழாய் வசதி கிடையாது. தண்ணீர் சேகரிக்க நாங்கள் கடல் ஊற்றுத் தண்ணீரைத் தான் நம்பியுள்ளோம்.

தனுஷ்கோடியில் எங்கள் குழந்தைககள் பயில 8ம் வகுப்பு வரையிலும் பள்ளி உள்ளது. அதனை 12ம் வகுப்பு வரையிலும் தரம் உயர்த்த வேண்டும். இப்போது, மேலும் படிக்க வேண்டும் என்றால் 18 கிலோமீட்டர் தூரத்திற்கு, ராமேஸ்வரத்திற்கு எங்கள் குழந்தைகள் செல்ல வேண்டி உள்ளது. இதனால் எங்கள் குழந்தைகள் 8ம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு, கடல் வேலைக்குச் சென்று விடுகின்றார்கள்.

50 ஆண்டுகளாக நாங்களும் தனுஸ்கோடிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி முறையிடாத கட்சிகள் இல்லை. ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி வருவதற்கு முறையான சாலை வசதி இல்லை என்பதால் ஒரு வேட்பாளர் கூட இந்த தேர்தலில் வாக்கு சேகரிக்க வில்லை, என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x