

சென்னை: தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தனித் தொகுதிகளுக்கு அக்.6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ம் தேதி தொடங்கி 16-ம் தேதியுடன் முடிவடைந்தது.
இதில் தவெக, திமுக, அதிமுக, நாதக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என மதுராந்தகத்தில் 48 மனுக்களும், தாராபுரத்தில் 51 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் மதுராந்தகம் தொகுதியில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட 28 மனுக்கள் ஏற்கப்பட்டு, முறையான ஆவணங்கள் இல்லாத 20 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தாராபுரம் தொகுதியில் 30 மனுக்கள் ஏற்கப்பட்டு, 21 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
நாளை வேட்பாளர் பட்டியல்: மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் நாளை (செப்.19) நிறைவடைகிறது. அதைத் தொடர்ந்து, நாளை மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சின்னம் ஒதுக்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.