

புதுச்சேரி சட்டப்பேரவையில் எம்எல்ஏ.வாக பதவியேற்ற முதல்வர் ரங்கசாமி. உடன் தற்காலிக சட்டப்பேரவைத் தலைவர் அன்பழகன். படம் : எம்.சாம்ராஜ்
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் 2 பேர் உட்பட 28 பேர் நேற்று எம்எல்ஏ.க்களாக பதவியேற்றனர்.
புதுவை சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியாகின. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக, லஜக தலா 1 இடங்கள் என மொத்தம் 18 இடங்களை என்டிஏ கைப்பற்றியது. திமுக 5, காங்கிரஸ் 1, நேயம் மக்கள் கழகம் 1, தவெக 2, சுயேச்சை 3 இடங்களை வென்றது. என்டிஏ கூட்டணி அரசின் முதல்வராக ரங்கசாமி கடந்த 13-ம் தேதி பதவியேற்றார். அவருடன் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
அதன்பின், புதுச்சேரி தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக அன்பழகன் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி உட்பட 28 எம்எல்ஏ.க்கள் பதவியேற்க சட்டப்பேரவை நேற்று கூடியது. தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன், எம்எல்ஏ.க்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
புதுச்சேரி மங்கலம் தொகுதி உறுப்பினராக முதல்வர் ரங்கசாமி பதவியேற்றுக் கொண்டார். ‘கடவுள் அறிய உறுதி கூறுகிறேன்’ என உறுதிமொழி எடுத்துக் கொண்டார். தொடர்ந்து எம்எல்ஏ.க்கள் பதவியேற்றனர். மணவெளி தொகுதி தவெக எம்எல்ஏ ராமு பதவியேற்கும் போது, ‘கடவுள் அறிய’ என்று கூறி விஜய் படத்தை காட்டினார். தவெக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றிருக்கும் நேயம் மக்கள் கழகத் தலைவர் நேரு, உறுதிமொழியை வாசித்த போது அதில் இல்லாத ஒரு வரியை குறிப்பிட்டார்.
பின்னர் அன்பழகன் கூறுகையில், “உறுப்பினர்கள் ஆர்வ மிகுதியால் உறுதிமொழியை விட கூடுதலானவார்த்தைளைச் சொல்கின்றனர்.அவை எதுவும் அவைக்குறிப்பில் இருக்காது” என்றார். பதவியேற்பு முடிந்த பிறகு, தவெக எம்எல்ஏ சாய் ஜெ.சரவணன் குமார், பேரவைத் தலைவர் அறையில் பதவியேற்றார்.