ஹஜ் புனிதப் பயணம் செல்ல ஜன. 19 முதல் விண்ணப்பிக்கலாம்: பிப். 20-ம் தேதி கடைசி நாள்

ஹஜ் புனிதப் பயணம் செல்ல ஜன. 19 முதல் விண்ணப்பிக்கலாம்: பிப். 20-ம் தேதி கடைசி நாள்
Updated on
1 min read

நடப்பு ஆண்டில் தமிழக மாநில ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் புனிதப்பயணம் செய்ய விரும்புவோர், வரும் 19-ம் தேதி முதல் விண்ணப்பங்களைப் பெற்று, பிப்ரவரி 20-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டுமென்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

2015-ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடமிருந்து, சில விதி முறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, ஹஜ் பயண விண்ணப்பங்களை வரவேற்கிறது.

சென்னை நுங்கம்பாக்கம் எண்.13, மகாத்மா காந்தி சாலை, ரோஸி டவரில் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு செயலாளர் மற்றும் செயல் அலுவலரிடமிருந்து ஹஜ் 2015 க்கான விண்ணப்பப் படிவங்களை, வரும் ஜனவரி 19 முதல் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் >www.hajcommittee.com என்ற இணையதளத்திலிருந்தும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பப் படிவங்களை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்தலாம். நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவங்களை பிப்ரவரி - 20ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

பிப்ரவரி 20-ம் தேதி அல்லது அதற்கு முன்பு வழங்கப்பட்டு, குறைந்தது மார்ச் 20, 2016ம் ஆண்டு வரையில் செல்லத்தக்க கணினி வழிப்பதிவு செய்யக்கூடிய பன்னாட்டு பாஸ்போர்ட்டை விண்ணப்பதாரர்கள் வைத்திருக்கவேண்டும். IFS குறியீடு உடைய வங்கியிலுள்ள தங்களின் கணக்கு விவரங்களை மனுதாரர்கள் அளிக்கவேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பயணி ஒருவருக்கு ரூ.300க்குத் திருப்பித் தரப்படாத பரிசீலனைக் கட்டணமாக, பாரத ஸ்டேட் வங்கியின் இணைப்பு வங்கி திட்டத்தின் மூலம், இந்திய ஹஜ் குழுவின் கணக்கில் செலுத்த வேண்டும். அதற்கான வங்கி ரசீதின் நகலை விண்ணப்பத்துடன் இணைத்து, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவுக்கு வரும் பிப்ரவரி- 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in