

புயல், சுனாமி, மழை வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற பேரிடர் நிகழ்வுகளை எதிர்கொள்ளவும், அதன் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் முன்கூட்டியே தடுத்து, உரிய நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் என்ற அமைப்பை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆணையம் அமைப்பது குறித்து கடந்த ஆண்டு பிப்ரவரியில், தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. பேரிடர் காலங்களில் பொறுப்புகளை பகிர்ந்து வழங்க மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும். பேரிடர் தடுப்பு, மேலாண்மை, மீட்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக மேலாண்மை ஆணையத்துடன் மாநில அளவிலான நடவடிக்கைக் குழு ஒன்றும் அமைக்கப்படும்.
மாநில நிவாரண ஆணையர் தலைமையில் வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புத் துறை, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட நிர்வாகம், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் உள்ளிட்டோர் அடங்கிய கோட்ட அளவிலான குழுக்கள், உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள், அரசு நிறுவனங் கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை இந்த ஆணையத்துடன் இணைந்து பேரிடர் நிவாரணம் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்படும்.
பேரிடர் காலங்களில் மாநில நிவாரண ஆணையர் தலைமையில், அவசர கால நடவடிக்கைக் குழு அமைக்கப்படும். இக்குழு, மாநில அளவிலான பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளுக்கான முகமையாக இருக்கும். பேரிடர் காலங்களில் சர்வதேச, தேசிய அளவிலான அமைப்புகள், அறக்கட்டளைகளிடம் இருந்து உதவிகளைப் பெறுவதற்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர்கள் மாநில அரசின் அனுமதியைப் பெற வேண்டும். நிதியுதவி தொடர்பாக தனி கணக்கை அவர்கள் பராமரிக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது
இந்நிலையில், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்து, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. முதல்வர் தலைமையிலான இந்த ஆணையத்தில் வருவாய்த் துறை அமைச்சர், தலைமைச் செயலர், வருவாய்த் துறை, நிதித்துறை மற்றும் உள்துறை செயலர்கள், வருவாய் நிர்வாகத்துறை ஆணையர் மற்றும் சிறப்பு ஆணையர், அண்ணா பல்கலைக்கழக பேரிடர் மேலாண்மை மைய இயக்குநர், சென்னை ஐஐடி-யின் சிவில் இன்ஜினீயரிங் துறைத் தலைவர் ஆகிய 8 பேர் உறுப்பினர்களாக இடம்பெறுவர் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
பேரிடர் காலங்களில் பொறுப்புகளை பகிர்ந்து வழங்க மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும். பேரிடர் தடுப்பு, மேலாண்மை, மீட்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக மேலாண்மை ஆணையத்துடன் மாநில அளவிலான நடவடிக்கைக் குழு ஒன்றும் அமைக்கப்படும்.