

இலங்கையில் 13-வது சட்டத்திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமுமில்லை என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு நேற்று சென்னை வந்திருந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஜல்லிக்கட்டு என்பது உள்ளூர் பிரச்சினை. இது தேசிய பிரச்சினை அல்ல. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ச இந்தியாவையும் சீனாவையும் மோதவிட நினைத்தார் என்று இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கூறியிருப்பது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான கருத்து. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பழங்காலம் முதலே நல்ல நட்பு இருந்தது. அது தொடர வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.
மேலும் இலங்கையில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், தமிழர்கள் நிலை மாறும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி முயற்சியால் ஏற்பட்ட இலங்கையின் 13-வது சட்டத்திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து இந்தியா என்றும் மாறவில்லை.
திரைப்பட தணிக்கைக்குழு உறுப்பினர்கள் அந்த பதவியிலிருந்து விலகியுள்ளனர். நேற்று வரை அவர்கள்தான் பதவியில் இருந்தனர். தணிக்கைத்துறையில் ஏதேனும் தவறு என்றால் அவர்களை அவர்களே குற்றம்சாட்டிக் கொள்ள வேண்டும். தணிக்கைக் குழுவை அரசியலாக்கியது காங்கிரஸ் அரசுதான், எனவே, தற்போதைய புதிய அரசை அவர்கள் குறை சொல்லக்கூடாது.
இவ்வாறு வெங்கைய நாயுடு கூறினார்.