

கேரள அரசு பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டத்தொடங்கி இருப்பது தமிழக மக்களுக்கு எதிரானது என்று த.மா.கா தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி 30 டி.எம்.சி. தண்ணீர் காவிரியில் இருந்து கேரளாவிற்கு வழங்கப்படுகிறது. இதில் 21 டி.எம்.சி. தண்ணீர் கபினியிலிருந்தும், 6 டி.எம்.சி. தண்ணீர் பவானியிலிருந்தும், 3 டி.எம்.சி. தண்ணீர் அமராவதி ஆற்றில் இருந்தும் கேரளாவிற்கு வழங்கப்படுகிறது.
பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டினால் அமராவதி நதிக்கு வரும் தண்ணீர் தடைபடும். தண்ணீர் அளவு குறைந்து போகும். தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரின் அளவும் குறையும். இதனால் திருப்பூர், கரூர் மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். சுமார் 1 லட்சம் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். சுமார் 50ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கான கூட்டு குடிநீர் திட்டமும் பாதிக்கும்.
காவிரி நடுவர் மன்ற அதிகார வரம்பிற்குள் பாம்பாறும் வருகிறது. நடுவர் மன்றத்தின் அனுமதி பெறாமல் அணை கட்ட தொடங்கியிருப்பது விதிகளை மீறிய செயலாகும். தமிழகத்தின் தண்ணீர் தேவையை பாதிக்கும் எந்த செயலையும் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
கேரள அரசு அணை கட்டத்தொடங்கியிருப்பதை உடனே கைவிட வேண்டும்.மத்திய, மாநில அரசுகள் உடனே தலையிட்டு கேரள அரசு பாம்பாற்றின் குறுக்கே அணை கட்ட தொடங்கியிருப்பதை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.