

கல்வி, ஊடகம், பண்பாடு என அனைத்துத் துறையிலும் இந்துத்துவா கருத்தை புகுத்த முயற்சி செய்யும் பாஜக தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் காலூன்ற முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் கோவில்பாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-வது மாவட்ட மாநாடு நேற்று மாலை தொடங்கியது.
இந்த மாநாடு 6-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. மாவட்ட மாநாட்டை அக்கட்சி யின் மாநில செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் தொடக்கி வைத்தார்.
வரும் 6-ம் தேதி பேரணி மற்றும் பொதுக் கூட்டத்துடன் மாநாடு நிறைவடைகிறது.
மாநாடு மண்டபத்தில் செய்தி யாளர்களுக்கு ஜி.ராமகிருஷ்ணன் அளித்த பேட்டியில் கூறியதாவது: பாரதிய ஜனதா கட்சி அரசு கல்வி, ஊடகம், பண்பாடு என அனைத்து துறையிலும் இந்துத்துவா கருத்தை புகுத்த முயற்சி செய்கிறது. இது இந்தியாவை பின்னோக்கி கொண்டு செல்லும்.
பகவத் கீதையை புனித நூலாக்கப் போவதாக சொல்வதும், சமஸ்கிருதத்துக்கு விழா கொண் டாட வேண்டும் என்பதும், மத்திய அமைச்சர் ஒருவரே மதவெறியைத் தூண்டும் விதமாக பேசுவதும், கோட்சேவுக்கு சிலை வைக்கப் போவதாக சொல்வதும், பிளாஸ்டிக் சர்ஜரி, விமானம், ஸ்டெம்செல் போன்றவை புராண காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக பிரதமர் உள்ளிட்டவர்களே சொல் வதும், இந்துத்துவா நாடாக இந்தியாவை மாற்றும் முயற்சி ஆகும்.
இதை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. திமுக, அதிமுக ஆகிய திராவிட கட்சிகளும் பாரதிய ஜனதா கட்சியின் இந்த கொள்கைகளை கடுமையாக எதிர்க்க முன்வர வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி காலூன்ற முடியாது.
பாஜக நேர்மையான கட்சி அல்ல. அக்கட்சியை சேர்ந்த வர்களும் ஊழல் வழக்கு களில் தண்டிக்கப்பட்டு உள்ளனர் என்றார்.