Published : 23 Jan 2015 10:34 AM
Last Updated : 23 Jan 2015 10:34 AM

தேக்கடியில் கார் பார்க்கிங் விவகாரம்: பசுமைத் தீர்ப்பாயம் புதிய உத்தரவு

தேக்கடியில் கேரள அரசு கார் பார்க்கிங் அமைக்கும் விவகாரம் தொடர்பாக 2 வாரங்களுக்குள் இரு நபர் குழுவை அமைத்து, அடுத்த 4 வாரங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்துக்கு பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வு நேற்று உத்தரவிட்டது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத் தைச் சேர்ந்த எம்.எஸ்.தங்கப்பன், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் னிந்திய அமர்வில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஒரு மனு தாக்கல் செய்தார். ‘இடுக்கி மாவட்டம் தேக்கடி புலிகள் பாதுகாப்பு வனப் பகுதியில் கேரள அரசு கார் பார்க்கிங் அமைத்து வருகிறது. அங்கு கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. இது வன பாதுகாப்பு சட்டம் 1980-க்கு எதிரானது. அப்பணிகளால் அங்கு சுற்றுச்சூழல் பாதிக்கும். எனவே, அப்பகுதியில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், தேக்கடி பகுதியில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள கடந்த ஆண்டு இடைக்கால தடை விதித்தது. இதைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பிலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தேக்கடியில் கார் பார்க்கிங் கட்டப்பட்டு வரும் இடம், கேரள அரசிடம் இருந்து தமிழக அரசு 999 ஆண்டுகள் லீஸ் அடிப்படையில் பெற்றுள்ள இடமாகும். அங்கு கேரள அரசு கார் பார்க்கிங் கட்ட தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தது.

இந்த மனுவை விசாரித்த தீர்ப் பாயம், இரு நபர் கொண்ட குழுவை அமைத்து, கேரள அரசு கார் பார்க்கிங் அமைத்து வருவது குறித்து 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்துக்கு கடந்த நவம்பரில் உத்தரவிட்டது.

இந்நிலையில், தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி எம்.சொக்கலிங்கம், தொழில்நுட்ப உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்பு இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு நபர் குழு அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மத்திய சுற்றச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் தீர்ப்பாய உறுப்பினர்கள் கூறினர். அவரோ குழு எதுவும் அமைக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

இதையடுத்து, அடுத்த 2 வாரங் களுக்குள் இந்திய கணக்கெடுப்பு ஜெனரல் அலுவலக உயரதிகாரி, வனத் துறையில் ஐஜி ரேங்கில் இருக்கும் ஒரு அதிகாரி ஆகியோரைக் கொண்ட இரு நபர் குழுவை அமைக்க வேண்டும். குழு அமைக்கப்பட்ட நாளில் இருந்து 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி விசாரணையை மார்ச் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x