Published : 05 Apr 2014 10:11 AM
Last Updated : 05 Apr 2014 10:11 AM

நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்கள்: கொளுத்தும் வெயிலில் காத்திருக்கும் அவலம்- மழை வருது.. வெயில் வருது..‘குடை’ கொண்டு வருமா சென்னை மாநகராட்சி?

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஏராளமான பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடைகள் இல்லை. நவீன நிழற்குடைகள் அமைப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு முன்பு நிழற்குடைகள் இடிக்கப்பட்ட இடங்களிலும் இன்னும் புதிதாக கட்டித்தரப்படவில்லை. இதனால், கொளுத்தும் வெயிலில் மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 783 வழித் தடங்களில் 3,652 பஸ்கள் இயக்கப்படுகின்றன. மாநகரபோக்குவரத்துக் கழகம் தொடங்கியபோது 176 வழித்தடங்களில் 1029 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இது போல, ஒருநாளில் பயணம் செய்வோர் எண்ணிக்கையும் 12 லட்சத்தில் இருந்து 50.38 லட்சமாக அதி கரித்துள்ளது. சராசரி தின வசூலும் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.85 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால், பஸ் நிறுத்தங்களில் நிழற் குடை என்பது மட்டும் பயணிகளுக்கு இன்னும் எட்டாத கனியாகவே இருக்கிறது. இதனால், வெயில் காலத்திலும் மழை காலத்திலும் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

விளம்பர வசூலுக்காக போட்டி

மாநகர பஸ்கள் இயக்கும் வழித்தடங்களில் 1,400-க்கும் மேற்பட்ட பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இதில் 500-க்கும் மேற்பட்ட பஸ் நிறுத்தங்களில் மட்டுமே பெயரளவுக்கு நிழற்குடைகள் இருக்கின்றன. இதில், அமைக்கப்பட்டிருந்த விளம்பரங்கள் மூலம் மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு வருமானம் கிடைத்தது. இதனால், பஸ் நிறுத்தங்களில் யார் நிழற்குடை அமைப்பது என்பது குறித்து சென்னை மாநகராட்சிக்கும், மாநகர போக்குவரத்து கழகத்துக்கும் போட்டி நடந்தது. நீதிமன்றத்தில் வழக்கும் நடந்தது.

இறுதியில், மாநகர போக்குவரத்துக் கழகம் 500 இடங்களிலும், எஞ்சியுள்ள மற்ற இடங்களில் சென்னை மாநகராட்சியும் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி, நவீன பஸ் நிழற் குடைகள் அமைக்கும் வகையில் தனியார் நிறுவன ஆக்கிரமிப்பில் இருந்த 377 நிழற்குடைகள் கடந்த 2010-ம் ஆண்டு மாநகராட்சியால் இடிக்கப்பட்டன. ஆனால், அதற்கு மாற்றாக இன்னும் முழுமையாக புதிய பஸ் நிழற்குடைகள் அமைக்கப்படவில்லை. அடுத்தடுத்து ஆட்சிகள் மாறினாலும் நிழற்குடைகளின் நிலை மட்டும் மாறாமல் அப்படியே இருக்கிறது.

நிழற்குடை இல்லாததால், கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் காத்திருக்க வேண்டியுள்ளது. மழை காலத்தில் நனைய வேண்டியிருக்கிறது.

‘மாநகராட்சிதான் பொறுப்பு’

இதுதொடர்பாக மாநகரபோக்கு வரத்துக்கழக அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைக்கும் முழு பொறுப்பும் சென்னை மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சி பல்வேறு இடங்களில் நவீன நிழற்குடைகள் அமைத்து வருகிறது. இந்த பணி படிப்படியாக அனைத்து பஸ் நிறுத்தங்களுக்கும் விரிவுபடுத்தப்படுவதாக மாநகராட்சி தெரிவித்திருக்கிறது’’ என்றனர்.

விரைவில் 1084 இடங்களில்..

இதுபற்றி சென்னை மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டதற்கு, ‘‘சென்னை மாநகராட்சி சார்பில் முதல்கட்டமாக மொத்தம் 500 பஸ் நிறுத்தங்களில் அதிநவீன நிழற்குடைகள் அமைக்கத் திட்டமிட்டோம். அதில், 75 இடங்களில் நிழற்குடை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும், 115 இடங்களில் கட்டுமானப் பணிகள் நடந்துவருகின்றன. இதைத் தொடர்ந்து, 1084 இடங்களில் தனியார் பங்களிப்போடு, அதிநவீன நிழற்குடைகளை சென்னை மாநகராட்சி அமைக்கவுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x