Published : 31 Dec 2014 11:25 AM
Last Updated : 31 Dec 2014 11:25 AM

அரசு உடனான பேச்சில் உடன்பாடு: பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த் தையில் சுமுக முடிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து 4 நாட்களாக நடந்து வந்த போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தனி குழு அமைக்கப்படும் என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து தொழிலாளர் களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 28-ம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.

திங்கள்கிழமை தொடங்குவதாக இருந்த பஸ் ஊழியர் வேலை நிறுத்தம், ஞாயிற்றுக்கிழமையை தொடங்கியதால் வெளியூரில் இருந்த வந்த பயணிகள் வீட்டுக்கு செல்ல பஸ் இல்லாமல்அவதிப்பட்டனர். குறைந்த அளவு பஸ்களே இயக்கப்பட்டதால் கடந்த 4 நாட்களாக பொதுமக்கள் அவதிப்பட்டனர். ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதால் சிரமப்பட்டனர்.

இதற்கிடையே, சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம் தொழிலாளர் நலத்துறை சிறப்பு துணை ஆணையர் யாஸ்மின் பேகம் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் தொழிற்சங்க பிரதிநிதிகள் நேற்று காலை பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சவுந்தரராஜன், சந்திரன் (சிஐடியு), சண்முகம், நடராஜன் (தொமுச), லட்சுமணன் (ஏஐடியுசி) உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டது. இதையடுத்து, 4 நாட்களாக நடந்து வந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர்.

பேச்சுவார்த்தைக்கு பிறகு நிருபர்களிடம் சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் எம்எல்ஏ கூறியதாவது:

போக்குவரத்து தொழிலாளர் களின் ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்று அமைக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார். பேச்சுவார்த்தைக்கான முத்தரப்பு குழு ஓரிரு நாளில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை விடுதலை செய்ய வேண்டும், அவர்கள் மீதுள்ள வழக்குகளை திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கையையும் அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.

அமைச்சருடனான பேச்சுவார்த் தையில் சுமுக முடிவு ஏற்பட் டதையடுத்து வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெற தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. தொழிலாளர்கள் இன்றும், நாளையும் படிப்படியாக வேலைக்கு திரும்புவர்.

இவ்வாறு சவுந்தரராஜன் கூறினார்.

தொமுச பொருளாளர் கி.நடராஜன் கூறும்போது, ‘‘வேலை நிறுத்தத்தில் சுமார் 1.20 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்றனர். அரசு குழு அமைத்தவுடன் 11 தொழிற்சங்கங்களின் நிர்வாகி களுடன் எங்கு பேசுவது, எப்போது பேசுவது போன்ற விவரங்களை வெளியிடுவர். அதன்படி, தொழிலா ளர்களின் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்’’ என்றார்.

வேலைநிறுத்தம் தொடர்ந்தால் புத்தாண்டு கொண்டாட சொந்த ஊருக்கு செல்லமுடியாதோ என்ற கவலையில் பலர் இருந்தனர். தற்போது வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

4 நாளில் ரூ.60 கோடி இழப்பு

தமிழகம் முழுவதும் அரசு போக்கு வரத்துக் கழகங்கள் சார்பில் 22 ஆயிரத்து 635 பஸ்கள் இயக்கப் படுகின்றன. கடந்த 4 நாட்களாக நடந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் குறைந்த அளவிலேயே அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால், போக்குவரத்துத் துறைக்கு ரூ.60 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் தனியார் பஸ்கள் அதிகமாக இயக்கப்பட்டன. ஆம்னி பஸ்களில் ரூ.200 முதல் ரூ.300 வரை கூடுதலாக கட்டணம் வசூலித்ததாக பயணிகள் புகார் கூறியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x