

சிவகங்கையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் மானாமதுரை சாலையில் உள்ளது கீழக்கண்டனி. இங்கு ஊருக்கு ஒதுக்குப்புறமாக தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் உள்ளது.
இங்கு பணி முடிந்ததும் அலு வலர்கள் நேற்று முன்தினம் அலு வலகத்தை பூட்டிவிட்டுச் சென்றனர். இதே ஊரைச் சேர்ந்த மாசானம்(65) காவலாளியாக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு காவல் பணியில் இருந்துள்ளார்.
அப்போது, வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் மாசானத்தின் வாயைப் பொத்தி, மயக்க ஊசி செலுத்தினர். இதில் அவர் மயக்கம் அடைந்தார். மேலும் மாசானத்தின் கை, கால்களை கட்டிப்போட்டுள்ளனர்.
பின்னர் தாங்கள் கொண்டு வந்திருந்த வெல்டிங் இயந்திரம் மூலம் பூட்டை உடைத்து அலுவலகத்துக்குள் புகுந்தனர். அங்கிருந்த அபாய மணி கருவியின் ஒயர் இணைப்பைத் துண்டித்தனர். பிறகு பெட்டகத்தை உடைக்க முயற்சி செய்துள்ளனர். அந்த முயற்சி தோல்வி அடைந்ததால் அக்கும்பல் தப்பியது. இதனால் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள், பல ஆயிரம் ரூபாய் தப்பின.
காலையில் அவ்வழியே சென்ற கிராமத்தினர், கூட்டுறவு சங்க அலுவலகம் திறந்து கிடப்பதைப் பார்த்து சிவகங்கை நகர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, சார்பு-ஆய்வாளர் பூமிநாதன் ஆகியோர் காவலாளி மாசானத்தை மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தடயவியல் டிஎஸ்பி பரமசிவம் தலைமையிலான குழுவினர் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஷ்வின் முகுந்த் கோட்னீஸ் கொள்ளை முயற்சி நடைபெற்ற கூட்டுறவு சங்க அலுவலகத்தைப் பார்வையிட்டு விசாரணை செய்தார்.