Published : 18 Jan 2015 03:09 PM
Last Updated : 18 Jan 2015 03:09 PM
இந்தியா இப்போது 2 டிரில்லியன் டாலர் பொருளா தாரமாக இருக்கிறது. ஏன் நாம் 20 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற கனவு காணக்கூடாது, திட்டமிடக்கூடாது என்று புதுடெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி கேள்வி எழுப்பினார்.
மேலும் இந்த இலக்கை அடைய அரசாங்கம் தயாராகி வருகிறது என்றும் மோடி தெரி வித்தார். வரி சீர்திருத்தம், தொழில் புரிவதற்கு உண்டான சூழ்நிலை ஆகியவற்றை வேகமாக செய்து வருகிறோம். இது கடினமானது. மேலும் சீர்திருத்தங்கள் மட்டுமே வேக மான பொருளாதார வளர்ச்சிக்கு போதாது.
அரசுத் துறைகளின் செயல்பாடு மிகவும் சிக்கலானதாகவும், மெதுவான செயல்பாடுகளைக் கொண்டதாகவும் உள்ளது. இதை மாற்றுவது நமக்குள்ள மிகப்பெரிய சவாலாகும். இதை மாற்றி வேகமாகவும், எளிமை யாகவும் செயல்பட நாம் மாற்ற வேண்டும்.
தொழில் தொடங்க பல கட்டங் களில் இருக்கும் அனுமதியைக் குறைத்து வருகிறது. மேலும் திட்டக்கமிஷனுக்கு மாற்றாக நிதி ஆயோக் தொடங்கப் பட்டிருக்கிறது. நாம் திட்டமிடுதலை தாண்டி செயல்படுத்துவதற்கு உருவாக்கப்பட்ட அமைப்பு இது. இந்தியாவை மாற்றுவதற்கான அமைப்பு இது என்று மோடி தெரிவித்தார்.
மேலும் நிதிப்பற்றாக்குறையை திட்டமிட்ட இலக்கிற்குள் கொண்டு வர அரசு உறுதியாக இருக்கிறது. சரக்கு மற்றும் சேவை வரியை கொண்டு வர கருத்தொற்றுமை ஏற்பட்டிருக்கிறது. பொதுத்துறை வங்கிகள் தன்னிச்சையான முடிவுகள் எடுக்க அதிகாரம் வழங்கப்படும் என்றும் மோடி தெரிவித்தார். மேலும் கங்கையை தூய்மை படுத்தும் திட்டமும் கூட பொருளாதார மேம்பாடுதான் என்றார்.
கடந்த ஆட்சியில் நடந்த சேதாரத்தையும் நாம் பழுது பார்க்க வேண்டும். இதற்கு கடின உழைப்பு தேவை மற்றும் திட்டமிடல் தேவை. இருந்தாலும் அந்த சேதாரத்தில் இருந்து நாம் மீண்டு வருவோம். நேரடியாக எரிவாயு மானியம் கொடுப்பது உலகத்திலே அதிக பணபரிவர்த்தனை நடக்கும் திட்டமாகும். இதை மற்ற திட்டங் களிலும் பின்பற்ற பணியாற்றி வருகிறோம் என்றார் மோடி.