Last Updated : 27 Feb, 2014 12:00 AM

 

Published : 27 Feb 2014 12:00 AM
Last Updated : 27 Feb 2014 12:00 AM

கம்யூனிஸ்ட்களுக்கு சீட் ஒதுக்கும்போது பாதிக்கப்படுவது யார்?- பதற்றத்தில் அதிமுக வேட்பாளர்கள்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அதிமுக தலைமை அறிவித்துவிட்டாலும், அக்கட்சி வேட்பாளர்கள் அந்த மகிழ்ச்சியை முழுமையாகக் கொண்டாட முடியாமல் ஒருவித பதற்றத்துடன் காத்திருக்கின்றனர்.

எதிர்க் கட்சிகள் வரிசையில் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் இன்னமும் இழுபறியாகிக் கிடக்கும் நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் களை திங்கள்கிழமை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார். இது அதிமுக- வினரிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தினாலும், கூட்டணிக் கட்சிகளான மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியமாக இருந்தது. ஏனெனில், இவ்விரு கட்சிகளுடன் கடந்த வாரம்தான் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை அதிமுக தொடங்கியது. கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனைத் தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பது உள்ளிட்ட விஷயங்கள் இன்னும் முடிவாகாத நிலையில், அதிரடியாக 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து விட்டார் ஜெயலலிதா.

கம்யூனிஸ்ட் கட்சிகள் வாதம்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே தங்களுக்கு தலா 3 தொகுதிகளை அதிமுக ஒதுக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் வாதம் செய்கின்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலின்போது, இதேபோல் தான் அதிமுக தரப்பில் 5 வேட்பாளர்களை திடீரென அறிவித்தார் ஜெயலலிதா. இதனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா மீண்டும் எம்.பி-யாக முடியுமா என்ற கேள்வி எழுந்தது. அக்கட்சியின் மேலிடத் தலைவர்கள் தலையிட்ட பின்னர், டி.ராஜாவுக்காக ஒரு வேட்பாளரைத் திரும்பப் பெற்றார் . இம்முறையும் கம்யூனிஸ்ட்களை அப்படி வழிக்குக் கொண்டு வருவதற்காகவே ஜெயலலிதா அனைத்துத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்திருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வறிவிப்பால், கம்யூனிஸ்ட் கட்சிகள் போலவே, அதிமுக வேட்பாளர்களும் திகைத்துப் போய் உள்ளனர்.

கம்யூனிஸ்ட்களுடன் தொகுதிப் பங்கீடு முடிவாகி, தலா இரண்டு வீதம் மொத்தம் நான்கு தொகுதிகளோ, அல்லது தலா ஒரு தொகுதி வீதம் இரண்டு தொகுதிகளோ ஒதுக்கப்படும் பட்சத்தில், யாரெல்லாம் களத்தைவிட்டு விலக வேண்டி இருக்குமோ என்ற ஒருவித பதற்றம் அதிமுக வேட்பாளர்களைத் தொற்றியுள்ளது. அதனால் பெரிய அளவில் தடபுடல்கள் எதுவுமின்றி அவர்கள் அமைதி காத்து வருகிறார்கள். தொகுதிப் பங்கீடு முடியும்வரை தாங்கள் தனிப்பட்ட விதத்தில் எந்தப் பிரச்சினையிலும் சிக்கி அதனால், கிடைத்த சீட்டை நழுவ விட்டுவிடக்கூடாது என்பதிலும் பலரும் கவனமாக இருக்கிறார்களாம். இதையெல்லாம் மேற்கோள் காட்டிப் பேசும் அதிமுக வேட்பாளர் ஒருவர், ’’கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் எவை என்று தெரியும் வரை அதிமுக வேட்பாளர்கள் அவஸ்தையின் விளிம்பில்தான் உட்கார்ந்திருக்க வேண்டும்’’ என்கிறார்.

அதிமுக வேட்பாளர்கள் முதல்வருடன் சந்திப்பு

அதிமுக வேட்பாளர்கள் 40 பேரும் ஒரே நேரத்தில் ஜெயலலிதாவை விரைவில் சந்திக்க இருக்கிறார்கள். இந்தச் சந்திப்பு, தலைமைச் செயலகத்தில் வியாழன் அல்லது இந்த வார இறுதிக்குள் நடைபெறலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x