

தமிழக அரசின் தலைமைச் செயலர், உள்துறை செயலர் மற்றும் அரசு ஆலோசகர்கள் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்புகள் வெளியாகவில்லை.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதைத் தொடர்ந்து, அவர் முதல்வர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து முதல்வராக அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டு வருகிறார்.
நிபந்தனை ஜாமீனில் உள்ள ஜெயலலிதா, போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து வெளியே வராமலும், கட்சி நிகழ்ச்சி உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்காமலும் உள்ளார். அவரை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அடிக்கடி சந்தித்துப் பேசுவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று தமிழக அரசின் தலைமைச் செயலர் கே.ஞானதேசிகன், உள்துறைச் செயலர் அபூர்வ வர்மா, அரசு ஆலோசகர்கள் ஷீலா பால கிருஷ்ணன் மற்றும் ராமானுஜம் ஆகியோர் போயஸ் கார்டனிலுள்ள வேதா இல்லத்துக்கு வந்து, ஜெயலலிதாவை சந்தித்துப் பேசிவிட்டு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நண்பகல் 12.45 மணி முதல் சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தலைமைச் செயலக வட்டாரத்தில் அதிகாரப்பூர்வ தகவல்களை தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
இதேபோல், நேற்று முன் தினம் ஜனவரி 1-ம் தேதி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சில அமைச்சர்கள் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசிய பின், தலைமைச் செயலர் ஞானதேசிகன் மற்றும் அதிகாரிகள் ஜெயலலிதாவை சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் அரசின் முக்கிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.