Published : 06 Jan 2015 10:24 AM
Last Updated : 06 Jan 2015 10:24 AM

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச கல்வித் தகுதி: ராஜஸ்தான் அரசின் முடிவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயம் செய்து அவசர சட்டம் பிறப்பித்துள்ள ராஜஸ்தான் அரசின் முடிவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ராஜஸ்தான் மாநில உள் ளாட்சித் தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயித்து அம்மாநில அரசு கடந்த டிசம்பர் 24-ம் தேதி அவசர சட்டம் பிறப்பித்தது.

இதன்படி, மாவட்ட ஊராட்சி (ஜில்லா பரிஷத்) மற்றும் ஊராட்சி ஒன்றிய (பஞ்சாயத் சமிதி) தேர்தல்களில் போட்டியிட குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊராட்சித் தலைவர் (சர்பஞ்ச்) பதவிக்கு போட்டியிட குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதுவே பழங்குடியினர் தனி தொகுதியாக இருப்பின் 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். என கல்வித் தகுதி நிர்ணயம் செய்யப்பட்டது.

அரசின் இந்த அவசர சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட 11 எதிர்க்கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. மேலும், உள் ளாட்சித் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள். இதனை நீட்டிக்கவும் கோரப்பட்டது.

‘கல்வித் தகுதி குறித்த அவசர சட்டம் காரணமாக, கிராமப்பகுதி வாக்காளர்களில் 80 சதவீதம் பேர், தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக 95 பெண் வாக்காளர்கள் போட்டியிட முடியாது. இந்த அவசர சட்டம் காரணமாக தற்போது மொத்தமுள்ள 5,000 ஒன்றிய உறுப்பினர்களில் 3,800 பேரும், 1,000 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களில் 550 பேரும் தகுதியிழப்பார்கள்’ என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இவ்வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையில் நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, ஆர்.கே. அகர்வால் ஆகியோரடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ராஜஸ் தான் அரசின் முடிவில் தலையிட மறுத்துவிட்டனர். அவசர சட்டம் குறித்து எவ்வித கருத்தையும் தெரிவிக்க மறுத்ததுடன், வேட்பு மனு தாக்கலுக்கான இறுதிநாளை நீட்டிக்கவும் மறுத்துவிட்டனர்.

அதேசமயம், இதுதொடர்பாக மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மாநில தலைவர் சச்சின் பைலட் கூறும்போது, “ இவ்விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் அரசு விவாதமோ ஆலோசனையோ நடத்தவில்லை. மக்களின் குரலை அரசு ஒடுக்குகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x