Published : 21 Jan 2015 10:47 AM
Last Updated : 21 Jan 2015 10:47 AM

ஒகேனக்கல் பஸ் விபத்து: தருமபுரி மருத்துவமனை வந்த அமைச்சர் கருத்து கூற மறுப்பு

ஒகேனக்கல் பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய போக்குவரத்து அமைச்சர் செந்தில் பாலாஜி விபத்து குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

ஒகேனக்கல் பஸ் விபத்தில் காயமடைந்து தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் ஆகியோர் இன்று காலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

ஒகேனக்கல் மலைப் பாதையில் 300 அடி ஆழ பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து உருண்டதில் 9 பேர் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

இதனையடுத்து, விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு ரூ.3 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஒகேனக்கல் பஸ் விபத்தில் காயமடைந்து தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் ஆகியோர் இன்று காலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

தருமபுரி மருத்துவமனையில் இருந்த பலத்த காயமடைந்தவர்கள் 24 பேருக்கும் தலா ரூ.50,000 நிவாரண உதவியும், சிறு காயமடைந்தவர்கள் 12 பேருக்கு தலா ரூ.25,000 நிவாரணத் தொகையும் அமைச்சர்கள் வழங்கினர்.

விபத்தில் 9 பேர் பலியாகினர். இவர்களில் 5 பேரது குடும்பத்தார் தருமபுரி மருத்துவமனையில் இருந்தனர். அவர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி நிவாரணத் தொகையை வழங்கினார்.

எஞ்சியுள்ள 4 பேரது குடும்பங்களும் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டதால் அங்கு நேரில் சென்று நிவாரணத் தொகையை வழங்கினார்.

இது தவிர காயமடைந்து மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள 8 பேருக்கும் மாவட்ட நிர்வாகம் மூலம் நிவாரணத் தொகையை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இழப்பீடு போதாது:

இதற்கிடையில், அரூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. டெல்லிபாபு, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு அளித்துள்ள இழப்பீடு போதாது. உயிரிழந்த 9 பேர் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், குறிப்பிட்ட அளவு கிலோமீட்டர் தூரத்திற்கு பயணம் செய்த பேருந்துகளை உபயோகப்படுத்தக்கூடாது என போக்குவரத்து விதி உள்ளது. ஆனால், பழைய, நிர்ணயிக்கப்பட்ட கி.மீ தூரத்தையும் தாண்டி பயணம் செய்த பேருந்துகளையெல்லாம் அரசு இன்னமும் இயக்கிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாகவே விபத்துகள் நடைபெறுகின்றன என டெல்லி பாபு குற்றஞ்சாட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x