

இந்தியாவில் 50 சதவீதத்துக்கும் மேலான மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை என மக்களுக்கான மருத்துவர் அரங்கத்தின் கவுரவத் தலைவர் டாக்டர் டி.காமராஜ் தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் 21-வது மாநில மாநாட்டையொட்டி, ‘மக்களுக்கான மருத்துவம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் நேற்று நடந்தது. அதில் மக்களுக்கான மருத்துவர் அரங்கத்தின் கவுரவத் தலைவர் டாக்டர் டி.காமராஜ் தலைமை வகித்து பேசியதாவது:
ஜப்பானில் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 84 ஆண்டு களாக இருக்கிறது. இந்திய மக்களின் சராசரி ஆயுட்காலம் (54 ஆண்டுகள்) உலக சராசரியைவிட குறைவாக இருக் கிறது. இந்தியாவில் உள்ள 3-ல் ஒரு பங்கு நோய்கள் தடுக்கக் கூடிய மற்றும் தவிர்க்கக் கூடிய நோய்களாகும். வயிற்றுப்போக்கு, காலரா, காசநோய், மலேரியா போன்ற நோய்களால்தான் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்படுகிறது.
இந்தியாவில் 50 சதவீதத்துக்கும் மேலான மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. அதே சமயத்தில் 94 கோடி பேர் செல்போன் உபயோகிக்கின்றனர். வறுமையை ஒழிக்காமல், சுகாதாரத்தை கொண்டுவர முடியாது. நல்ல உணவு, பாதுகாப்பான குடிநீர், தூய்மையான வாழ்விடம் போன்றவைதான் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என்றார்.
கொசு வலை கொடுக்கலாம்
மாநாட்டு வரவேற்புக் குழு தலைவர் க.பீம்ராவ் எம்எல்ஏ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்தை மருத்துவத் துறைக்கு ஒதுக்க வேண்டும். கொசு ஒழிப்பு திட்டத்துக்கு நொச்சிச் செடி களை கொடுப்பதைவிட, கொசு வலைகளை கொடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து மக்களுக்கு தேவையான அடிப் படை மருந்துகளை உற்பத்தி செய்து கொடுக்க வேண்டும்” என்றார்.
இந்த கருத்தரங்கில் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை முன்னாள் இயக்குநர் ரெக்ஸ் சற்குணம், எம்ஐடிஎஸ் ஓய்வு பெற்ற பேராசிரியர் என்.நாகராஜ், மருந்து விற்பனை பிரதிநிதிகள் யூனிட்டை சேர்ந்த எஸ்.எஸ்.பெருமாள், என்.சிவகுரு, ஆர்.ரமேஷ் சுந்தர், திருவல்லிக்கேணி மார்க்சிஸ்ட் கட்சியின் பகுதி செயலாளர் எம்.சுரேந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.