

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அட்டவணை 8-ல் உள்ள 22 மொழிகளையும் மத்திய அரசின் ஆட்சிமொழியாக்க தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.
இது குறித்து சென்னையில் நேற்று நடைபெற்ற பத்திரிகை யாளர்கள் சந்திப்பில் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் ஆழி.செந்தில் நாதன் பேசும்போது, “1965-ம் ஆண்டு இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது.
மத்திய பாஜக அரசு இந்தி மொழித் திணிப்பில் ஈடுபட்டு வருவதை மொழியுரிமைக் கூட்டியக்கம் கண்டிக்கிறது. மத்திய அரசு அங்கீகாரமுள்ள பள்ளிகளில் ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக இந்திய மொழிகள் அனைத்தையும் அழிக்கும் போக்கு தலைதூக்கியுள்ளது.
தமிழக மக்களின் மொழியுரி மைக்காக போராடுவதற்காக பல தமிழ் அமைப்புகளும் முற்போக்கு, சமூக நீதி, மக்கள் பண்பாட்டு அமைப்புகளும் ஒன்று சேர்ந்து தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கம் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அட்டவணை 8-ல் உள்ள 22 மொழிகளையும் மத்திய அரசின் ஆட்சிமொழியாக்க இந்த அமைப்பு பல்வேறு போராட்டங்களை மேற்கொள்ளும்.
மேலும், தமிழகத்தில் மொழிப் போர் நடைபெற்ற 50-ம் ஆண்டின் நினைவாக, 25-ம் தேதி (நாளை) மாலை 3 மணிக்கு மெரினா கடற் கரையிலுள்ள திருவள்ளுவர் சிலை அருகே மொழிப்போர்த் தியாகி களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும். 2015-ம் ஆண்டை மொழி உரிமை ஆண்டாக கடை பிடிக்கவும் தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கம் முடிவெடுத்துள்ளது” என்று தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மொழி உரிமைப் போராளி பேராசிரியர் அ.ராமசாமி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த தியாகு, தமிழ்நாடு மக்கள் கட்சியைச் சேர்ந்த செல்வி உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தோர் உடனிருந்தனர்.