

ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் தலித் என்பதால் தமிழக அரசு அவருக்கு சரியான பதவி அளிக்காமல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் இன்று நிருபர்களை சந்தித்த தொல். திருமாவளவன் கூறியதாவது:
''உமாசங்கர் சிறந்த ஐஏஎஸ் அதிகாரி. தலித் என்பதால் அவருக்கு சரியான பதவி அளிக்காமல் தமிழக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அவருக்கு உரிய பணியை ஒதுக்கி இருந்தால், இறை பணிக்கு சென்றிருக்கமாட்டார்.
கன்னியாகுமரியில் ஒரு வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பும்போது, உமாசங்கரின் கார் உடைக்கப்பட்டது கண்டனத்துக்குரியது.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் திமுக பொதுவாக எங்களிடம் ஆதரவு கேட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி நேரடியாக ஆதரவு கேட்டுள்ளது. இதுகுறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசித்துவிட்டு, இறுதி முடிவை நாளை வியாழக்கிழமை அறிவிப்போம்'' என்று திருமாவளவன் கூறினார்.