

சென்னை எழும்பூர் பழைய காவல் ஆணையர் அலுவலகம் எதிரே கென்னத்லேன் சாலையில் பிரபலமான ஒரு தங்கும் விடுதி உள்ளது.
கடந்த 2-ம் தேதி சிபிசிஐடி போலீஸ்காரர்கள் 2 பேர் உட்பட 10-க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் கூடி விடுதி அறையில் மது அருந்தினர். அப்போது அங்கு வந்த விடுதி மேலாளர் அறையை காலி செய்யுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த போலீஸார் தகராறில் ஈடுபட்டு, விடுதி மேலாளரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து மோதலில் ஈடுபட்டவர்கள் குறித்த விவரங்கள் எழும்பூர் காவல் நிலையத்தில் இருந்து அந்தந்த பகுதி துணை ஆணையர்களுக்கு அனுப்பப்பட்டன. அதைத் தொடர்ந்து முதற்கட்டமாக 5 போலீஸாரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.