

கிரானைட் கற்களை வெட்டி எடுப்பதற்காக குளங்கள், வாய்க்கால், பொதுப்பாதை, மயானங்களை அழித்திருப்பது சட்ட ஆணையர் உ.சகாயம் ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. இதை தடுக்க தவறியதால் வருவாய், பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் அவர் அதிருப்தி தெரிவித்தார்.
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகள் குறித்து சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். மேலூர் பகுதியிலுள்ள கீழவளவு, கீழையூர், மேலப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அந்த கிராமங்களிலுள்ள பெரும்பாலான குளங்களை அழித்து, சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதால், தங்களின் வாழ்வாதாரம் முடங்கிவிட்டதாக அந்த கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.
அவற்றை ஆய்வு செய்தபோது செட்டிகுளத்தில் சுமார் 76 அடி ஆழத்துக்கு தோண்டப்பட்டு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டிருந்தது. இதுதவிர மேலப்பட்டி குளம், மேடங்குளம், கொல்லங்குண்டு கண்மாய், கீழையூர் சிசி கண்மாய், பொதுப் பணித் துறைக்கு சொந்தமான பாசன வாய்க்கால், ஆதிதிராவிடருக்கான மயானம், தானியங்களை உலர வைக்க பயன்படுத்தப்படும் களம், வண்டிப்பாதை ஆகியவற்றை அழித்து கிரானைட் தொழில் செய்துவந்தது உறுதி செய்யப்பட்டது. இதுதவிர அரசு புறம்போக்கு நிலங்களும் குவாரி முதலாளிகளின் பிடியிலிருந்து தப்பவில்லை எனத் தெரியவந்தது.
கீழையூர் அருகே ரெங்கசாமிபுரம் என்ற கிராமத்தை தடம் தெரியாமல் அழித்துவிட்டு, அந்த இடத்தில் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக கிடைத்த புகாரின்பேரில் அங்கு சென்று ஆய்வு செய்தார். அங்கிருந்த பொதுமக்கள் சகாயத்திடம் கூறும்போது, கிரானைட் நிறுவனங்களுக்கு நாங்கள் விரும்பி நிலங்களை கொடுக்கவில்லை. மிரட்டியதால் வழியின்றி கொடுத்துவிட்டோம். தர மறுத்தவர்களின் நிலங்களில் கற்களைக் கொட்டினர். குளங்களுக்கு நீர் செல்லும் வாய்க்கால், பாசன கிணறுகளிலும் மண்ணைப்போட்டு மூடிவிட்டனர். இதுபற்றி நாங்கள் அளித்த புகாரை காவல், வருவாய், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை. இந்த அழிவுக்கு அரசு அதிகாரிகள்தான் முக்கிய காரணம். இந்த பகுதியில் அரசு அதிகாரிகளாக இருந்தவர்கள் ஓய்வுக்குப் பின் கிரானைட் நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்துவிட்டனர். எனவே அதிகாரிகள் மீதும் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். நீதிமன்றத்தில் இதுபற்றிய விவரங்களை சமர்ப்பிப்பதாக அவர்களிடம் சகாயம் உறுதியளித்தார்.
பஞ்சபாண்டவர் மலை
பஞ்சபாண்டவர் மலையை ஆய்வு செய்தபோது மத்திய அரசின் தொல்லியல் துறைக்கு சொந்தமான இடத்தில் 40 சதவீத பகுதிகளில் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அரசு நிலங்களில் கிரானைட் கற்களுக்காக வெட்டப்பட்ட பள்ளங்களை குவாரி நிறுவனங்களே மீண்டும் கற்களை போட்டு மூடி வைத்திருந்திருந்தன. அவற்றையும் சகாயம் பதிவு செய்துகொண்டார்.