Published : 27 Apr 2014 10:00 am

Updated : 27 Apr 2014 11:51 am

 

Published : 27 Apr 2014 10:00 AM
Last Updated : 27 Apr 2014 11:51 AM

தேனீக்களை செல்லப்பிராணியாக வளர்க்கும் சென்னைவாசி

நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை வளர்ப்பதைப் போல சென்னையைச் சேர்ந்த ஒருவர் தேனீக்களை வளர்த்து வருகிறார். இயற்கையை பேணிக்காக்க வேண்டும் என்பதற்காக தேனீக் களை வளர்த்து வருவதாக அவர் கூறுகிறார்.

சென்னையை அடுத்த சிட்லபாக்கத்தில் வசித்து வருபவர் சுவாமிநாதன். அவரும் அவரது நண்பர்கள் 10 பேரும் தங்கள் வீடுகளில் செல்லப் பிராணிகளாக தேனீக்களை வளர்த்து வருகிறார்கள். தேனீக்கள் வளர்ப்போர் கூட்டமைப்பு என்ற அமைப்பை தொடங்கியுள்ள அவர்கள், தேனீக்களை வளர்க்க பலரையும் ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.


சுவாமிநாதனின் வீட்டு வாசல் மற்றும் மொட்டை மாடியில் 15 பெட்டிகளில் தேனீக்கள் ரீங்காரமிட்டு பறந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் இரண்டு பெட்டிகளில் இத்தாலிய தேனீக்கள் வளர்க்கப் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இப்படி தேனீக்களை வளர்ப்பதால் மரம் மற்றும் செடி கொடிகள் நல்ல முறையில் வளர்ச்சியடையும் என்று அவர் கூறுகிறார்.

இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், “தேனீக்கள் கொட்டிவிடக்கூடும் என்று பயந்து யாரும் அதை வளர்ப்பதில்லை. ஆனால் தேனீக்கள் அவ்வளவு சீக்கிரம் யாரையும் கொட்டாது. தங்களுக்கு யாராவது தொல்லை கொடுத்தால் மட்டுமே கொட்டும். நம்மில் பலர் வீடுகளில் நாய், பூனை, போன்ற செல்லப்பிராணிகளை வளர்க்கிறோம். அவை கூட சில நேரங்களில் கடிக்கத் தான் செய்யும்.

ஆனால் அதற்காக யாரும் அவற்றை வளர்க்காமல் இருப்பதில்லையே. அதுபோல்தான் தேனீக்களும்” என்று சொல்லும்போதே அட்டைப் பெட்டிக்குள் கையை விட்டு தேனீக்களை கொத்தாக அள்ளுகிறார். அந்த தேனீக்கள் அவரைக் கொட்டாமல் சாதுவாக இருக்கின்றன.

தேனீக்களை வளர்ப்பதால் என்ன பயன் என்று கேட்டபோது, “லாபத்துக்காக மட்டும் அவற்றை வளர்க்கக்கூடாது. இயற்கையிடம் இருந்து எவ்வளவோ விஷயங் களை நாம் எடுத்து கொள்கிறோம். அந்த இயற்கைக்கு நாம் திருப்பிக் கொடுக்கும் விதமாக தேனீக்களை வளர்க்கலாம். வீட்டிற்கு ஒரு மரம் நட்டால் மட்டும் போதாது அவற்றை பாதுகாக்க தேனீக்களையும் வளர்க்க வேண்டும்” என்றார்.

தேனீக்களால் விவசாயத்திற்கும் நன்மையுண்டு என்று சொல்லும் சுவாமிநாதன், “அமெரிக்கா போன்ற நாடுகளில் விவசாயிகள் தேனீக்களை நம்பித்தான் விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள். நம்மை போலவே தேனீக்களும் மல ஜலம் கழிக்கின்றன. அவை விவசாய நிலங்களுக்கு சக்திவாய்ந்த இயற்கை உரமாகும். நம்மூரில் விவசாய நிலங்களில் யூரியா, பொட்டாஷ் என்று செயற்கை உரங்களை இடுவதால் தேனீக்கள் அந்தப்பக்கமே செல்வது கிடையாது” என்கிறார்.

அவரது வீட்டில் உள்ள தேனீக்களின் பொழுது காலை 5 மணிக்கே தொடங்கிவிடுகிறது. காலை 9 மணி வரை அருகாமையில் உள்ள தாவரங்களில் பயணித்து மகரந்தங்களை கடத்தும் வேலையை செய்யும் அவை, மீண்டும் மாலை 3 மணிக்கு கூடுகளுக்கு திரும்பி வந்து கூட்டினை சுத்தப்படுத்தி இளம் தேனீக்களுக்கு உணவளிக்கிறதாம்.

மேலும் அவர் கூறுகையில், “தேனீக்கள் இப்படி பயணிப்பதன் மூலம் எங்கள் பகுதியில் சுமார் 5 கிலோமீட்டர் வரை மகரந்தங்களைப் பரப்புகிறது. பிறகு மீண்டும் தேன் கூடுள்ள பெட்டிக்கு வந்து அடைந்து விடும். இந்த தேனீக்களில் வேலைக்காரத்தேனீக்களும், ராணித்தேனீயும் எந்நேரமும் இயங்கும். ஆண் தேனீக்கள் இனப்பெருக்கத்திற்காக பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும் செப்டம்பர், அக்டோபர் மாதத்திலும் தான் தேனீ பெட்டியை தேடி வரும்.

தேனீக்கள் ஒரு நாளைக்கு 800 முதல் 1000 முட்டைகளை இட்டு வருவதால் காலப்போக்கில் தேனீக்களின் எண்ணிக்கை அதிகரித்து விடும். இதன் மூலம் காலனி ஒன்றிற்கு மாதம் குறைந்தது பத்தாயிரத்துக்கும் அதிகமான புது தேனீக்கள் உற்பத்தியாகும்.

மார்த்தாண்டத்தில் தேனீக்களை வளர்க்கும் பெட்டி கிடைக்கிறது. கோடை காலத்தில் மட்டும் சர்க்கரையை கரைத்து இவற்றுக்கு உணவளிக்க வேண்டும். இன்றைய இளம் சமுதாயத்தினர் தேனீக்களை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அரசும் தோட்டக்கலைத் துறை மூலம் இதை பெருமளவில் செயல்படுத்த வேண்டும்” என்று கூறுகிறார்.

புதிதாக தேனீக்களை வளர்க்க விரும்புவோர் அதில் உள்ள சந்தேகங்களை சுவாமிநாதனிடம் கேட்கலாம், அவரை +919487887800 என்ற எண்ணிலும், swaminathan@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியின் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.


தேனீ வளர்ப்புசெல்லப் பிராணிதேனீக்கள் வளர்ப்போர் கூட்டமைப்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x