தஞ்சை தொகுதியில் கடும் போட்டியில் அதிமுக, திமுக

தஞ்சை தொகுதியில் கடும் போட்டியில் அதிமுக, திமுக
Updated on
1 min read

ஐந்து முனைப் போட்டி உள்ள தஞ்சை மக்களவைத் தொகுதியில், கடந்த 50 ஆண்டுகளாக சென்னையில் அரசியல் செய்த டி.ஆர்.பாலு, திமுக வேட்பாளராக களத்தில் உள்ளார். தஞ்சை தொகுதிக்குப் புதுமுகம். ஆனாலும், கடந்த சில ஆண்டுகளாக இத்தொகுதியில் கொண்டு வந்த ரயில்வே திட்டங்களால் நகர்ப்புற மற்றும் இளம் வாக்காளர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளவர்.

சாதனைப் புத்தகம், இணையம், எஸ்எம்எஸ், செல்போன் என பலவித புதுமையான உத்திகளை அறிமுகப்படுத்தி எதிர்க்கட்சியினரையும் வாக்காளர்களையும் திக்குமுக்காடச் செய்து, பிரச்சார களத்தில் முன்னிலையில் இருந்த டி.ஆர். பாலு, இப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மீத்தேன் வாயு திட்டம், மதுபான ஆலை பிரச்னைகளுக்கு பதில் சொல்வதிலேயே பிற்பகுதியை செலவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இவரை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கு.பரசுராமன், ஊராட்சி மன்றத் தலைவர் என்ற அளவில் தஞ்சையில் அரசியல் செய்தவர் என்றாலும், தஞ்சை மக்களவைத் தொகுதிக்கு புதுமுகமே. எனினும் டி.ஆர். பாலு மீதான எதிர்ப்பலை மற்றும் திமுக உட்கட்சி பூசலால் உற்சாகம் பெற்று நம்பிக்கையுடன் வெற்றிக் களிப்பில் உலா வருகிறார். இவரது வெற்றிக்காக, இவரை பரிந்துரை செய்த அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் கட்சியின் அனைத்து அணிகளையும் முடிக்கி விட்டு பம்பரம் போல் சுழன்று வருகிறார்.

பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் மிகத் தாமதமாவே வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும், மோடிக்கு ஆதரவான இளம் ஆதரவாளர்களின் கணிசமான வாக்குகளும், தேமுதிக, மதிமுக, பாமகவினரின் வாக்குகளுமே இவரது பலம். இவரைச் சார்ந்த சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பட்டுக்கோட்டை, மன்னார்குடி, பேராவூரணி பகுதிகளில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இதனாலும், அதே சமூகத்தைச் சேர்ந்த டி.ஆர். பாலுவுக்கு ஆதரவான வாக்குகள் பிரியக்கூடும்.

காங்கிரஸ் வேட்பாளர் து.கிருஷ்ணசாமி வாண்டையாருக்கு, காங்கிரஸுக்கு உள்ள பாரம்பரியமான வாக்குகளும், அவரது குடும்பம் நடத்தும் கல்லூரியில் பயின்ற மாணவர்களின் வாக்குகளும், அவரது சமூகத்தினர் அதிகம் உள்ள ஒரத்தநாடு, திருவையாறு, தஞ்சாவூர் பகுதிகளில் கணிசமான வாக்குகளும் கிடைக்கலாம்.

மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளரான எஸ்.தமிழ்ச்செல்விதான் தஞ்சை மக்களவைத் தொகுதியின் முதல் பெண் வேட்பாளர். எளிமையான அனுகுமுறை, மற்ற கட்சிகளின் மீது உள்ள அதிருப்தியால் மாற்றத்தை விரும்பும் மக்கள் இவருக்கு வாக்களிக்கலாம். கூடவே, மன்னார்குடி, நீடாமங்கலம், பாப்பநாடு, பேராவூரணி பகுதியில் செல்வாக்குடன் உள்ள தோழமைக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்குகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கென உள்ள வாக்குகளும், நடுத்தர மற்றும் தொழிற்சங்க இயக்கங்களின் ஆதரவும் கிடைக்க வாய்ப்புள்ளது.

இங்கு 5 முனை போட்டி என்றாலும், திமுக, அதிமுக இடையேதான் உண்மையான போட்டி நிலவுகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவின் எஸ்.எஸ். பழநிமாணிக்கம், மதிமுகவின் துரை.பாலகிருஷ்ணனை 1.11 லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். ஆனால், இந்த முறை வெற்றி நூலிழையில்தான் அது அதிமுகவுக்கா, திமுகவுக்கா என்பதுதான் கேள்விக்குறி?.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in