

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அம்மா சிமென்ட் விற்பனை இன்று தொடங்கப்படவுள்ளது. இதுதொடர்பாக ஆட்சியர் வி.கே.சண்முகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அம்மா சிமென்ட் விற்பனை தொடங்கப் படவுள்ளது. ஊரக வளர்ச்சித் துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் இணைந்து இந்த விற்பனையை மேற்கொள்ளவுள்ளன.
இதற்காக ஊரக வளர்ச்சித் துறை சார்பில், வாலாஜாபாத், குன்றத்தூர், திருப்போரூர், புனித தோமையார் மலை, அச்சிறுப்பாக்கம், இலத்தூர், சித்தாமூர், காட்டாங்கொளத்தூர் ஆகிய 8 ஒன்றியங்களில் கிடங்கு கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில், பல்லாவரம், தாம்பரம், மறைமலை நகர், அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம், காஞ்சிபுரம், உத்திரமேரூர், பெரும்புதூர், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர், சாலை ஆய்வாளர் ஆகியோரில் ஒருவரிடம், உரிய சான்றிதழ் மற்றும் மூட்டைக்கு ரூ. 190 வீதம் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ‘tancem chennai’ payable at Chennai என்ற பெயரில் வரைவோலை எடுத்து, கிடங்குகளில் கொடுத்து 50 கிலோ கொண்ட அம்மா சிமென்ட மூட்டைகளைப் பெறலாம்.
100 சதுர அடிக்கு 50 மூட்டைகள் வீதம் அதிகபட்சமாக 1,500 சதுர அடி வரை சிமென்ட் மூட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம். கட்டிட புனரமைப்புப் பணிகளுக்காக குறைந்தபட்சம் 10 மூட்டைகள் முதல் அதிகபட்சமாக 100 மூட்டைகள் வரை பெறலாம்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் முத்துமீனாள் கூறும் போது, ‘அம்மா சிமென்ட் விற்பனைக்காக தற்போது தனியாக ஆட்கள் நியமிக்கப்படவில்லை. இந்தப் பணியை தற்காலிகமாக ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களே கவனிப்பர். பணப் பரிவர்த்தனையால் ஏற்படும் குளறுபடிகளைத் தவிர்க்கவே வங்கி வரைவோலை முறை செயல்படுத்தப்படுகிறது.
அம்மா சிமென்ட் விற்பனைக் கென தனியாக ஆட்கள் நியமிக்கப்பட்டதும், ரொக்கத்துக்கு சிமென்ட் மூட்டைகள் விற்பனை செய்யப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.