Published : 21 Jan 2015 09:26 AM
Last Updated : 21 Jan 2015 09:26 AM

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் ஊதிய குறைப்பு: அரசாணையை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் ஊதியத்தை குறைக்கும் வகையில் 2009-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் வி.மணிவாசகன் உட்பட 4 ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக் கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் இடையேயான ஊதிய விகிதம் 3:2 அடிப்படை விகிதத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2009-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அராசணையின் படி, 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையில் முதுநிலை ஆசிரியர்களுக்கான சம்பளம் குறைந்துள்ளது.

இதன்படி, பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்களின் ஊதியம் சமமான நிலைக்கு மாறி உள்ளது. 6-வது ஊதியக் குழுவின் படி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் அடிப்படை சம்பளம் ரூ. 6,500 ஆகவும், பட்டதாரி ஆசிரியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.5,500 ஆக இருந்தது.

இந்நிலையில்,கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதியன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்குப் பிறகு

இருவருக்கும் இடையேயான அடிப்படை சம்பளத்தில் ரூ. 200 மட்டுமே வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தற்போது 7-வது ஊதியக் குழு பரிந்துரையின் படி, 2009-ம் ஜூன் மாதம் முதல் தேதி பணியில் சேர்ந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் ஊதியம் பட்டதாரி ஆசிரியர்களின் ஊதியத்தை விட குறைவாக உள்ளது.

எனவே, 2009-ம் ஆண்டு ஜூன் முதல் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். சரியான ஊதியத்தை நிர்ணயம் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜரானார். அரசு தரப்பில் அரசு கூடுதல் வழக்கறிஞர் பி.சஞ்சய்காந்தி ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x